மந்திரவாதி கொலை-இருவர் கைது

252 0

சங்கிலியால் கைகள் கட்டப்பட்ட நிலையில் களனி கங்கையில் மீட்கப்பட்ட சடலம், 54 வயதுடைய மந்திரவாதி ஒருவருடையது என இனங்காணப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்.

இந்நபருடன் தகாத தொடர்பு வைத்திருந்த பெண், மற்றுமொரு நபருடன் கொண்டிருந்த முறையற்ற உறவு காரணமாகவே இந்தக் கொலை இடம்பெற்றுள்ளமை விசாரணைகளில் தெரியவந்துள்ளதாகவும் கூறினார்.

இந்தச் சம்பவம் தொடர்பில் நேற்று (29) கருத்து வெளியிட்ட பொலிஸ் ஊடக பேச்சாளர், நவகமுவ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ரணாலை பகுதியில் களனி கங்கையில் கடந்த 26ஆம் திகதி சங்கிலியால் கைகள் கட்டப்பட்ட நிலையில் மீட்கப்பட்ட சடலம், ஹங்வெல்ல பகுதியைச் சேர்ந்த 54 வயதுடைய மந்திரவாதி ஒருவருடையது என அடையாளம் காணப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.

அத்துடன், இந்தச் சம்பவம் தொடர்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் விசாரணைகளுக்கமைய, மந்திரவாதியுடன் முறையற்ற உறவு வைத்திருந்த பெண்ணொருவர் உட்பட மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் எனவும் அவர் கூறினார்.

சடலமாக மீட்கப்பட்ட மந்திரவாதியும் கைது செய்யப்பட்ட பெண்ணும் ஹங்வெல்ல பொலிஸ் பிரிவில் எம்புல்கம பகுதியில் தற்காலிகமாக வசித்து வந்துள்ள நிலையில், கடந்த 23ஆம் திகதி, இருவர் வீட்டுக்குள் புகுந்து மந்திரவாதியைக் கடத்திச் சென்றுள்ளதாகக் கைதுசெய்யப்பட்டுள்ள பெண் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.

எனினும், பொலிஸாரால் முன்னெடுக்கப்பட்ட விசாரணையில், குறித்த பெண்ணுக்கும் கல்குவாரியில் வேலைபார்க்கும் எல்புல்கம பகுதியைச் சேர்ந்த சாரதிக்கும் இடையில் தகாத தொடர்பு ஏற்பட்டுள்ளமை காரணமாகவே இந்த கொலை இடம்பெற்றுள்ளதாக தெரியவந்துள்ளதாக ஊடகப்பேச்சாளர் குறிப்பிட்டார்.
இதனையடுத்து, பனுவஸ்வெவ பகுதியைச் சேர்ந்த 49 வயதுடைய சாரதியும், ஹோமாகம – பிட்டிபன பகுதியைச் சேர்ந்த 33 வயதுடைய அவரது உறவினரான நபரும் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

சந்தேகநபர்கள், கொலைக்குப் பயன்படுத்திய சுத்தியல் மற்றும் மோட்டார் சைக்கிள் என்பன பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளதுடன், ஹங்வெல்ல பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளதாக சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் மேலும் தெரிவித்தார்.