கல்முனை மாநகர சபையின் சுகாதார ஊழியர்களுக்குத் தொற்று

185 0
கொரோனா வைரஸ் தொற்றுக் காரணமாக கல்முனை மாநகர சபையின் 29 சுகாதார ஊழியர்கள் உட்பட பெருந்தொகையானோர் கடமைக்கு சமூகமளிக்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளதாக மாநகர மேயர் சிரேஷ்ட சட்டத்தரணி ஏ.எம்.றகீப் தெரிவித்தார்.இந்நிலையிலேயே திண்மக்கழிவகற்றல் சேவையையும் இதரப் பணிகளையும் முன்னெடுக்க வேண்டியிருப்பதாகவும் எனவே, பொதுமக்கள் பொறுப்புடன் நடந்துகொள்ள வேண்டுமெனவும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்..

கல்முனை மாநகர சபையின் சுகாதாரப் பிரிவில் கடமையாற்றுகின்ற 04 சுகாதாரத் தொழிலாளர்களும் பொறியியல் பிரிவில் ஒரு ஊழியரும், நிதிப் பிரிவில் ஒரு ஊழியருமாக 06 பேர் கொரோனா தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர். அத்துடன், இவர்களுடன் தொடர்புடைய பல ஊழியர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், மாநகர சபையின் செயற்பாடுகள் தொடர்பாக மாநகர மேயர், நேற்று (28) மாலை ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கையில் மேலும் கூறியதாவது;

“கல்முனை மாநகர சபையின் திண்மக்கழிவகற்றல் சேவைக்கு 150 சுகாதாரத் தொழிலாளர்கள் தேவையாக உள்ள நிலையில் 52 நிரந்தர ஊழியர்களும் 52 தற்காலிக ஊழியர்களுமாக 104 ஆளணியினரே எம்மிடம் உள்ளனர்.

“இந்நிலையில், இவர்களுள் கொரோனா வைரஸ் தொற்றால் பீடிக்கப்பட்டுள்ள 04 சுகாதாரத் தொழிலாளர்கள் உட்பட தனிமைப்படுத்தப்பட்டோர் உள்ளடங்கலாக 29 சுகாதாரத் தொழிலாளர்களால் கடமைக்குச் சமூகமளிக்க முடியவில்லை.

“அவ்வாறே ஏனைய பிரிவுகளிலும் பலர் தனிமைப்படுத்தப்பட்டு, கடமைக்கு சமூகமளிக்க முடியாதிருக்கின்றனர்.

“அத்துடன், கொரோனா அபாய சூழல் காரணமாக மாநகர சபைக்கு கிடைக்க வேண்டிய வருமானங்கள் யாவும் தடைப்பட்டிருக்கின்றன.

“இவ்வாறு நிதி மற்றும் ஆளணிப் பற்றாக்குறைக்கு மத்தியிலேயே எமது மாநகர சபையானது திண்மக்கழிவகற்றல் சேவையையும் வடிகான் மற்றும் தெரு விளக்குப் பராமரிப்பு உள்ளிட்ட இதர பணிகளையும் மேற்கொண்டு வருகின்றது.

“இக்காலப்பகுதியில் மாநகர சபையின் சேவைகளில் ஏற்படுகின்ற குறைபாடுகளையும் அசௌகரியங்களையும் பொதுமக்கள் பொறுமையுடன் பொறுத்துக்கொள்ள வேண்டும் என வினயமாக வேண்டிக்கொள்கின்றேன்” என்றார்.