கந்துவட்டி கொடுமையால் லாரி உரிமையாளர் தற்கொலை

226 0

தி.மலை அருகே கந்துவட்டி கொடுமையால் தற்கொலை செய்து கொண்ட லாரி உரிமையாளர் உடலுடன் உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால், பெங்களூரு தேசிய நெடுஞ் சாலையில் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

திருவண்ணாமலை அடுத்த சின்னபாலிப்பட்டு கிராமத்தில் வசித்தவர் ராமஜெயம்(48). லாரி உரிமையாளர் மற்றும் செங்கல் சூளை நடத்தி வந்தார். இவர், பெரியகோட்டாங்கல் கிராமத்தில் வசிக்கும் வடிவேல் என்பவரிடம் கடந்த 2018-ம் ஆண்டு ரூ.1 லட்சம் கடன் பெற்றுள்ளார். அந்த கடன் தொகைக்காக இரண்டரை ஆண்டுகளாக வட்டி செலுத்தி வந்ததாக கூறப்படுகிறது. மேலும், கரோனா ஊடரங்கு காரணமாக தொழிலில் பின்னடைவு ஏற்பட்ட தால் கடந்த ஓராண்டாக வட்டி செலுத்த முடியவில்லை.

இந்நிலையில், கடன் வாங்கியபோது அடமானம் போடப்பட்ட ஓர் ஏக்கர் நிலத்தை, கடன் கொடுத்த வடிவேல் கிரையம் செய்து கொண்டதாக கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த ராமஜெயம் நேற்று முன்தினம் மாலை பூச்சி மருந்து குடித்து தற்கொலை செய்து கொண்டார். இந்நிலையில், கடன் கொடுத்த வடிவேல் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி, திருவண்ணாமலை – பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் உள்ள ஒட்டகுடிசல் கிராமம் அருகே ராமஜெயம் உடலுடன் உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் நேற்று சாலை மறியலில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து தகவலறிந்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பவன்குமார் சம்பவ இடத்துக்கு சென்று சாலை மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி கடன் கொடுத்த வடிவேல் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், அவரிடம் இருந்து ஓர் ஏக்கர் நிலத்தை மீட்டுக் கொடுக்கப்படும் என தெரிவித்தார். இதையடுத்து சாலை மறியல் முடிவுக்கு வந்தது. ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இது குறித்து திருவண்ணாமலை கிராமிய காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.