விவசாயிகளின் நெல் கொள்முதல் அளவை உயர்த்த வேண்டும்- ஜிகே வாசன் வலியுறுத்தல்

211 0
மழையில் விவசாயிகளின் ஒட்டுமொத்த உழைப்பும் வீணாகிறது. ஆகவே அரசு அவர்களுக்கு தேவையான சாக்கு பைகளை வழங்கியும், தினந்தோறும் நெல் கொள் முதல் அளவை உயர்த்தியும் விவசாயிகளை காக்க வேண்டும்.

த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

தமிழக விவசாயிகள் புயல், வெள்ளம் மற்றும் தண்ணீர் பற்றாக்குறை போன்று கால சூழ்நிலைக்கு ஏற்ப பல்வேறு இடர்பாடுகளுக்கு இடையில் அவற்றிற்கெல்லாம் மீறி விவசாயத்தை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில் விளைவித்த நெல்லை விற்பனைக்கு கொண்டு வரும் போது கொள்முதல் நிலையங்களில் ஒவ்வொரு ஏரியாவிற்கு தகுந்தவாறு மூட்டை ஒன்றுக்கு ரூ.30 முதல் ரூ.45 வரை வசூல் செய்யப்படுகிறது.

இந்த பணத்தை விவசாயிகளிடம் இருந்து வசூலிக்க தடை விதிக்க வேண்டும். “உழுதவன் கணக்குப் பார்த்தால் உழக்கு கூட மிஞ்சாது” என்பார்கள் இருந்த போதிலும் விவசாயி அவற்றையெல்லாம் பார்க்காமல் உழைப்பை மட்டுமே பார்த்து உலகுக்கு சோறு போடும் உன்னதப் பணியில் ஈடுபடுகின்றனர். அவர்களின் உயர்விற்கு நாம் என்றும் துணை நிற்க வேண் டும்.

தற்பொழுது பல்வேறு இடங்களில் ஆழ்துளை கிணறு மூலம் விவசாயம் செய்து நெல் அறுவடை செய்து வருகின்றனர். அறுவடை செய்த நெல்லை விற்பனை செய்வதற்காக அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களுக்கு எடுத்து செல்லும் போது அங்கு சாக்கு பற்றாக்குறையின் காரணமாக உடனடியாக விற்பனை செய்ய முடியாமல் அவதிக்குள்ளாகின்றனர்.

அதோடு அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் ஒருநாளைக்கு 500 சிப்பம் தான் நெல் கொள்முதல் செய்கின்றனர். இதனால் மேலும் விவசாயிகள் சிரமத் திற்குள்ளாகின்றனர்.

குறைந்த அளவில் நெல் கொள்முதல் செய்யப்படுவதாலும், சாக்கு பற்றாக் குறையின் காரணமாகவும், நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் விவசாயிகள் நெல்லை கொட்டிவைத்து கொண்டு காத்துகிடக்கின்ற இந்நிலை மேலும் நீடிக்க கூடாது. சிலநேரங்களில் திடீர் என்று மழைபெய்வதால் அவை அனைத்தும் நனைந்து வீணாகிவிடுகிறது.

இதனால் ஒருநாள் மழையில் விவசாயிகளின் ஒட்டுமொத்த உழைப்பும் வீணாகிறது. ஆகவே அரசு அவர்களுக்கு தேவையான சாக்கு பைகளை வழங்கியும், தினந்தோறும் நெல் கொள் முதல் அளவை உயர்த்தியும் விவசாயிகளை காக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.