அரச தகவல் இணையத்தில் அதிகளவு தமிழ்ப் பிழைகள்: விக்னேஸ்வரன் எம்.பி. அறிக்கை

411 0

கிராமசேவகர் பிரிவுகளை இணையம் வழியாக தொடர்பு கொள்வதற்காக அரசாங்க தகவல் நிலைய இணையம் வெளியிட்டுள்ள விபரங்களில் மிக மோசமான தமிழ்க் மொழிக் கொலை இடம்பெற்றுள்ளதாகவும் இதனைத் திருத்துவதற்கு அரசாங்கம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பாராளுமன்ற உறுப்பினரும் வட மாகாண முன்னாள் முதலமைச்சருமான க.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

தமிழர்களின் மாவட்டங்கள், பிரதேசங்கள், கிராமங்கள் மற்றும் தென்னிலங்கையின் தமிழ்ப் பெயர்கள் முழுக்க முழுக்க எழுத்துப் பிழையுடன் வெளியிடப்பட்டுள்ளமை பெரும் அதிருப்தியையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளதாகவும் விக்னேஸ்வரன் அறிக்கை மூலம் தெரிவித்துள்ளார். அந்த அறிக்கையில்தெரிவிக்கப்பட்டுள்ளவை வருமாறு:

‘அண்மையில், கிராமசேவகர் பிரிவுகளை இணையம் வழியாக தொடர்பு கொள்வதற்கான விபரங்களை அரசாங்க தகவல் நிலைய இணையம் வெளியிட்டுள்ளது. இதில் தமிழர்களின் மாவட்டங்கள், பிரதேசங்கள், கிராமங்கள் மற்றும் தென்னிலங்கையின் தமிழ்ப்பெயர்கள் முழுக்க முழுக்க எழுத்துப் பிழையுடன் வெளியிடப்பட்டுள்ளமைஎனக்கு பெரும் அதிருப்தியையும் அதிர்ச்சியையும் தருகின்றது.

வட மாகாணத்தின் பெயர்கள் தவறாக எழுதப்பட்ட இடங்கள் சிலவற்றை சுட்டிக்காட்டலாம் என எண்ணுகிறேன். உதாரணமாக யாழ்ப்பாணத்தை யாழ்பாணம் என்றும் முல்லைத்தீவை முள்ளைத்தீவு என்றும் எழுதியுள்ளார்கள். அதேபோன்று துணுக்காய் என்பதை துணுக்கை என்றும் கூழா முறிப்பு என்பதை கோல முறிப்பு என்றும் முழங்காவில் என்பதை முலங்கவில் என்றும் இயக்கச்சியை ஐயக்கச்சி என்றும் பிழையாக எழுதியுள்ளார்கள். இங்கே
நான் குறிப்பிட்டவை சில உதாரணங்களே. அரச தகவல் தொடர்பு நிலைய இணையத்தில் ஏனைய விபரங்களைப் பார்வையிடலாம். இவை அனைத்தும் உடனடியாக திருத்தப்பட வேண்டும் என்பதை சம்பந்தப்பட்டவர்கள் கவனத்தில் கொள்ள வேண்டும்.

ஒரு நாட்டின் முக்கிய அரசாங்க அலுவலகத்தின் அறிவிப்பு வெளியீடு இத்தகைய தமிழ் பிழைகளுடன் வெளியிடப்படுவது என்பது சாதாரண விடயமல்ல. இதனைத் திருத்துவதற்கு சரியான வகையில் ஒரு தமிழ் அதிகாரியை அல்லது அலுவலரை குறித்த அலுவலகம் கொண்டிருக்கவில்லையா என்ற கேள்வியும் எனக்கு எழுகின்றது.

காலம் காலமாக தமிழ் மொழியைப் பிரயோகிப்பதில் அரச நிர்வாகம் கண்டுவரும் தோல்வியின் தொடர்ச்சியாகவும், தமிழ் மொழி மீதான மதிப்பற்ற தன்மையும் அலட்சியப் போக்காகவுமே இது நடந்திருக்கின்றது என்பதை மாத்திரம் தெளிவாக உணர்ந்து கொள்ள முடிகின்றது. இவ்வாறு வடக்கு கிழக்கு மாகாணத்தின் பெயர்கள் மாத்திரமின்றி ஒட்டுமொத்த தமிழ் மக்களும் அவமதிப்பு செய்யப்பட்டுள்ளனர் என்றே இதனைக் கொள்ள வேண்டும்.

ஏற்கனவே, பேருந்துகளில் தமிழ்மொழி தூசன வார்த்தைகளாக எழுதப்பட்டதைக் கண்டு மிக வேதனை அடைந்திருக்கிறேன். தென்னிலங்கையில்தான் இதனை அதிகமாக கண்டிருக்கிறோம். அத்துடன் பல அரச திணைக்களங்களில் கூட தமிழ்மொழி பிழையாக எழுதப்பட்டு இருப்பதை ஊடகங்கள் பலவும் சுட்டிக்காட்டியுள்ளன.

அதேபோன்று அரச சுற்று நிருபங்கள்கூட தமிழ்மொழியில் வெளியிடப்படாமல் தனிச் சிங்களத்தில் வருவதனாலும்கூட இன்றுவரை தமிழ் மக்கள் பல்வேறு இடர்பாடுகளுக்கு முகம் கொடுத்து வருகின்றர் என்பதையும் நினைவுபடுத்த விரும்புகிறேன். அத்துடன் மத்திய அரசாங்கத்தின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ள சில திணைக்களங்களுக்குச் சென்றால், மக்கள் தமிழில் உரையாடி

தமது தேவைகளை நிவர்த்தி செய்ய முடியாத நிலையும் காணப்படுகின்றது. தமிழுடன் தமிழர்களும் இங்கே புறக்கணிக்கப்பட்டுள்ளனர்.மொழி என்பது ஓர் இனத்தின் அடையாளம். தமிழ்மொழி இரண்டாயிரம் வருடங்களுக்கு முந்தைய வரலாற்றுப் பாரம்பரியத்தைக் கொண்டது.

செம்மொழி என்ற அந்தஸ்தையும் பெற்றிருக்கிறது. இன்று தமிழ்மொழி இல்லாத நாடு இல்லை என்று சொல்லலாம். உலக நாடுகள் பலவற்றில் தமிழுக்கு மிக உயரிய மதிப்பு வழங்கப்படுகின்ற போது, தமிழ் மக்கள் பல ஆயிரம் வருட பூர்வீகத்தைக் கொண்ட தங்கள் நிலத்தில் சுதேசிகளான தமிழ் மக்களின் தமிழ் மொழி கொலை செய்யப்படுகின்றமை பெரும் மன உளைச்சலையும் வேதனையையும் தருகின்றது.

இந்த விடயத்தில் நான் அரசை மாத்திரம் குற்றம் சொல்ல மாட்டேன். டக்ளஸ் தேவானந்தா போன்றவர்கள் காலம் காலமாக அமைச்சராக இருந்து தமிழர்களுக்கு தொண்டு புரிவதாக சொல்லி வருகின்றனர். தமிழ் மக்களுக்கு அதிகாரத்தையோ அல்லது அபிவிருத்தியையோ கூட இவர்களினால் பெற்றுக்கொடுக்க முடியாது போனாலும் ஆகக்குறைந்தது தமிழ் மொழிக் கொலையையாவது தடுக்க முடியாத கையறு நிலையில் இருக்கிறார்கள்.

தனிச்சிங்களச் சட்டமும், தமிழ் மொழி மீதான புறக்கணிப்பும், மொழி அழிப்பும் இந்தத் தீவில் பாரிய விளைவுகளை உண்டுபண்ணிய பின்னரும்கூட தொடர்ந்தும் தமிழ் மொழி புறக்கணிக்கப்பட்டும் கொலை செய்யப்பட்டும் வருகின்றது என்பது கவனத்தில் கொள்ளப்படவேண்டும். ஆகவே, நான் மேலே சுட்டிக்காட்டியுள்ள விடயத்தில் அரசாங்க தகவல் நிலைய இணையம் தவறுகளை திருத்து

வதற்கு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கின்றேன். மொழியை அழிப்பதும் இனவழிப்புத்தான் என்பதை மறந்து விடக்கூடாது என்பதையும் இவ்விடத்தில் நினைவுபடுத்திக் கொள்கிறேன்’ என அவர் தெரிவித்துள்ளார்.