முன்னாள் அமைச்சர் மணிகண்டனை கைது செய்தது எப்படி?

268 0

நடிகை சாந்தினி அளித்த புகாரில் தலைமறைவான முன்னாள் அமைச்சர் மணிகண்டன் இன்று காலை போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

நடிகை சாந்தினி அளித்த புகாரின் அடிப்படையில் அடையாறு போலீசார் பதிவு செய்துள்ள வழக்கில் முன் ஜாமீன் அளிக்க கோரி முன்னாள் அமைச்சர் மணிகண்டன் சென்னை ஐகோர்ட்டில் மனுதாக்கல் செய்தார். அந்த மனு கடந்த 16-ந்தேதி தள்ளுபடி ஆனது. இதையடுத்து மணிகண்டனை கைது செய்ய 2 தனிப்படைகள் அமைத்து போலீசார் தேடி வந்தனர். மதுரைக்கு தனிப்படை நேரில் சென்று விசாரணை நடத்தியது.
இந்த நிலையில் இன்று காலை பெங்களூரில், முன்னாள் அமைச்சர் மணிகண்டன் கைது செய்யப்பட்டார்.
பெங்களூரில் நண்பர் ஒருவரது பண்ணை வீட்டில் மணிகண்டன் பதுங்கி இருப்பதாக கிடைத்த தகவலின் பேரில் நேற்று இரவு தனிப்படை போலீசார் அங்கு விரைந்து சென்றனர். இன்று காலை அவர் இருக்கும் இடத்தை கண்டுபிடித்த போலீசார் மணிகண்டனை சுற்றி வளைத்து கைது செய்தனர்.
பின்னர் அவருக்கு ஓட்டல் ஒன்றில் காலை உணவு வாங்கி கொடுத்தனர். அதனை மணிகண்டன் சாப்பிட்டார். உடனடியாக அவரை சென்னைக்கு போலீஸ் வாகனத்தில் ஏற்றி அழைத்து வருகின்றனர்.
நடிகை சாந்தினி அளித்த புகாரில் மணிகண்டன் தன்னுடன் குடும்பம் நடத்தியது அவரது பாதுகாவலர், டிரைவர், வீட்டு வேலைக்காரர் ஆகியோருக்கு தெரியும் என்று தெரிவித்து இருந்தார். இதன்படி அவர்களிடம் போலீசார் ஏற்கனவே
விசாரணை நடத்தினர்.
அதே நேரத்தில் தனக்கு கருக்கலைப்பு செய்த டாக்டரின் பெயர், ஆஸ்பத்திரி விவரங்களையும் புகாரில் குறிப்பிட்டு இருந்தார். கடந்த சில நாட்களாக இது தொடர்பான ஆதாரங்களை போலீசார் முழுமையாக திரட்டி வைத்து இருந்தனர். அந்த அடிப்படையில் தான் மணிகண்டனை இன்று அதிரடியாக போலீசார் கைது செய்துள்ளனர்.
நடிகை சாந்தினி வெளியிட்ட புகைப்படம்
இன்று பிற்பகலில் மணிகண்டனை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்க உள்ளனர். பெங்களூரில் இருந்து வரும் வழியில் பாலியல் புகார் தொடர்பாக மணிகண்டனிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தினர். சாந்தினி தனது புகார் மனுவுடன் போட்டா மற்றும் வீடியோ ஆதாரங்களையும் போலீசாரிடம் கொடுத்து இருந்தார். அதனையும் அவரிடம் காட்டி விசாரித்தனர்.
இந்த விசாரணையின் போது மணிகண்டன் அளித்த தகவல்களை போலீசார் வாக்கு மூலமாக பதிவு செய்துள்ளனர்.
கடந்த அ.தி.மு.க. ஆட்சியின்போது ராமநாதபுரம் தொகுதியில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட மணிகண்டன் தகவல் தொழில்நுட்ப அமைச்சராக பணிபுரிந்தார்.
நடிகை சாந்தினி மலேசிய சுற்றுலா வளர்ச்சி கழக தூதரக கழகத்தில் பணிபுரிந்து வந்தார். அப்போதுதான் அவர்கள் இருவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.
பாலியல் வழக்கில் முன்னாள் அமைச்சர் ஒருவர் கைது செய்யப்பட்டு இருப்பது தமிழக அரசியல் வட்டாரத்தில்  பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.