சட்டசபை நாளை கூடுகிறது- கவர்னர் பன்வாரிலால் உரையாற்றுகிறார்

197 0

கவர்னர் உரைக்கு நன்றி தெரிவித்து உறுப்பினர்கள் பேசி முடித்ததும் இறுதி நாள் அன்று முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலின் விரிவாக பதில் அளித்து பேசுவார்.

தமிழக சட்டசபையின் முதல் கூட்டத்தொடர் ஒவ்வொரு ஆண்டும் கவர்னர் உரையுடன் தொடங்கப்படுவது வழக்கம். அந்த வகையில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தி.மு.க. அமைச்சரவை அமைந்த பிறகு புதிய எம்.எல்.ஏ.க்கள் பதவி ஏற்பதற்காகவும், சபாநாயகரை தேர்ந்தெடுக்கவும் சட்டசபை கூட்டப்பட்டது.

அதன்பிறகு நடைபெறும் முதல் சட்டசபை கூட்டத்தொடர் கலைவாணர் அரங்கில் நாளை காலை (திங்கட்கிழமை) தொடங்குகிறது.

இதற்காக சமீபத்தில் கவர்னர் பன்வாரிலால் புரோகித்தை முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலின் சந்தித்து பேசினார். இதைத் தொடர்ந்து சபாநாயகர் அப்பாவு கவர்னரை நேரில் சந்தித்து அழைப்பு விடுத்தார்.

இதையொட்டி கவர்னர் பன்வாரிலால் புரோகித் நாளை காலை கலைவாணர் அரங்கில் நடைபெறும் சட்டசபை கூட்டத்தொடரை தொடங்கி வைத்து உரையாற்றுகிறார். அவர் ஆங்கிலத்தில் வாசித்து முடித்ததும் அந்த உரையை சபாநாயகர் அப்பாவு தமிழில் வாசிப்பார். அத்துடன் நாளைய சட்டசபை கூட்டம் முடித்துக் கொள்ளப்படும்.

அதைத்தொடர்ந்து அலுவல் ஆய்வுக்குழு கூட்டம் சபாநாயகர் அப்பாவு தலைமையில் கூடி சட்டசபையை எத்தனை நாட்கள் நடத்துவது என்பது குறித்து முடிவு செய்யும். அநேகமாக இந்த கூட்டத்தொடர் 4 நாட்கள் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கவர்னர் உரைக்கு நன்றி தெரிவித்து உறுப்பினர்கள் பேசி முடித்ததும் இறுதி நாள் அன்று முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலின் விரிவாக பதில் அளித்து பேசுவார்.

தி.மு.க. அரசு ஆட்சிக்கு வந்து நடைபெறும் முதல் கூட்டம் என்பதால் தி.மு.க.வின் தேர்தல் அறிக்கையில் இடம் பெற்றிருந்த முக்கிய அறிவிப்புகள் கவர்னர் உரையில் இடம்பெறலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

குறிப்பாக குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.1000 வழங்கும் திட்டம். அரசு ஊழியர்களுக்கான பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் அமல்படுத்துவது, கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்கு பாராட்டு, மேகதாது அணை விவகாரம், அரசுக்கு வர வேண்டிய ஜி.எஸ்.டி. நிலுவை தொகை உள்ளிட்ட பல்வேறு வி‌ஷயங்கள் ஆளுநர் உரையில் இடம்பெறும் என தெரிகிறது.

எதிர்க்கட்சி தலைவராக எடப்பாடி பழனிசாமி, துணைத்தலைவராக ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்ட நிலையில் முதல் முறையாக எதிர்க்கட்சி வரிசையில் அமர்கின்றனர். சட்டசபை கூட்டத்தில் முந்தைய அ.தி.மு.க. அரசின் மீது தொடுக்கப்படும் விமர்சனங்களுக்கும், குற்றச்சாட்டுகளுக்கும் இவர்கள் உடனுக்குடன் பதில் அளிப்பார்கள் என்பதால் அமைச்சர்களுடன் காரசார விவாதம் நடைபெறும்.

இந்த கூட்டத்தொடரில் பல்வேறு சட்ட மசோதாக்களும் கொண்டுவரப்பட உள்ளது. இந்த கூட்டத்தொடரை தொடர்ந்து அடுத்த மாதம் பட்ஜெட் தாக்கல் செய்வதற்காக மீண்டும் சட்டசபை கூடும். அப்போது சுமார் ஒரு மாத காலம் சட்டசபை நடைபெறும்.

தற்போது கொரோனா காலமாக உள்ளதால் சட்டசபை கூட்டத்தொடரில் பங்கேற்கும் அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள் உள்ளிட்ட அனைவருக்கும் கடந்த 2 நாட்களாக கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.

இதில் நெகட்டிவ் முடிவுகள் வந்தவர்கள் மட்டுமே சட்டசபைக்குள் அனுமதிக்கப்படுவார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது