ரணில் விக்கிரமசிங்க, பாராளுமன்றம் வருவதால், ஐக்கிய மக்கள் சக்தியினர் குழப்பமடைந்துள்ளதாகத் தெரிவித்த சுற்றுலாத்துறை அமைச்சர் பிரசன்ன ரணதுங்க, எதிர்க்கட்சித் தலைவர் பதவியை ஏற்குமாறு ஐ.ம.சக்தியைச் சேர்ந்த சிலரால் ரணிலுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
கம்பஹாவில் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும் போது அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
தொடர்ந்து கருத்து தெரிவித்த அமைச்சர் பிரசன்ன ரணதுங்க, கம்பஹா மாவட்டத்தில் நிர்மாணிக்கப்படும் மத்திய அதிவேக வீதியின் நிர்மாணப் பணிகள் தொடர்பில், மாவட்ட மக்களின் கருத்துக்களுக்கு அரசாங்கம் செவிமெடுக்கவில்லை என்றால், பாரதூரமானப் பிரச்சினைகளுக்கு முகங்கொடுக்க நேரிடுமெனவும் தெரிவித்தார்.
இதேவேளை, தற்போதைய அரசாங்கம் அதன் பொறுப்புக்களை உரிய முறையில் நிறைவேற்ற வேண்டுமெனவும், நாட்டை நினைத்தே எரிபொருள்களின் விலை அதிகரிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் மக்களின் நலன்கருதியே, பொதுஜன பெரமுனவின் செயலாளர் அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார் எனவும் தெரிவித்தார்.
எரிபொருள் விலை அதிகரிப்பு தொடர்பில் என்னிடம் யாராவது, இது சரியா? தவறா எனக் கேட்டால் தவறென்றே தான் கூறுவதாகவும் அவர் கூறினார்.
எரிபொருள்களின் விலை அதிகரிப்பு தவறு என, அரசியல் கட்சிகளின் தலைவர்கள் பலர் கருத்துத் தெரிவித்து வரும் நிலையில், ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச்செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்திருந்த கருத்துக்கள் ஊடகங்களில் பெரிதாகக் காண்பிக்கப்பட்டதாகவும் தெரிவித்தார்.

