amalஉதய கம்மன்பிலவுக்கு எதிராக ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுவின் பொதுச்செயலாளர் வெளியிட்ட அறிக்கைக்கு ஊடகங்களின் வாயிலாக பதிலளிப்பதற்கு தயாராக இல்லை என்று விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
வெலிப்பன்ன பகுதிக்கு நேற்று(15) விஜயம் மேற்கொண்டிருந்த போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
இதன்போது தொடர்ந்துரைத்துள்ள அவர், இவ்விடயத்தில் ஐக்கிய தேசிய கட்சியைப் போன்று நாம் செயற்படப்போவதில்லை. உள்வீட்டு விவகாரங்களை பொதுவெளியில் பேசியதால் ஐக்கிய தேசியக் கட்சிக்கு என்ன நடந்தது என்பது நாம் அனைவரும் அறிந்ததே.
கட்சியின் பொதுச்செயலாளராக இருப்பவர்கள், பொதுச்செயலாளர் என்ற முறையில் ஊடகங்களுக்கு சில விடயங்களை அறிவிக்க முடியும். அதற்கான உரிமை அவர்களுக்கு உள்ளது.
கட்சிக்குள் இருக்கும் முரண்டுபாடுகள், விமர்சனங்களான தொடர்பிலான விடயங்களை பொதுவெளியில் பேசக்கூடாது.
எமது கட்சியின் பொதுச்செயலாளர் வெளியிட்ட அறிக்கை தொடர்பிலும் அமைச்சர் கம்மன்பிலவுக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் தொடர்பிலும் ஊடகங்களின் வாயிலாக பதிலளிப்பதற்கு நாம் எதிர்பார்க்கவில்லை.
தற்போதைய நிலையில் நாட்டு மக்களுக்குத் தேவையான நிவாரணங்களைப் பெற்றுக்கொடுப்பதே மிக முக்கியமானது. 5,000 ரூபாய் நிவாரண கொடுப்பனவுக்காக 87 பில்லியன் ரூபாய் நிதியை அரசாங்கம் ஒதுக்கியுள்ளது.
அதேபோன்று அத்தியாவசியப் பொருட்களின் விலைகளை குறைத்து மக்களின் வாழ்வாதாரச் செலவீனங்களைக் குறைப்பதற்கான வேலைத்திட்டங்கள் தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டு வருகிறது.
நிறுவனங்களைக் கொண்டு நடத்துவதற்காக நிறுவனங்களின் தலைவர்களின் தீர்மானங்களுக்கு செவிசாய்க்க வேண்டும். எரிபொருள் விலையேற்றமும் அவ்வாறனதொரு தீர்மானமாகும்.
வேண்டுமென்றே பொருட்களின் விலைகள், எரிபொருட்களின் விலைகளை அதிகரிப்பதற்கு எந்த ஓர் அரசாங்கமும் விரும்புவதில்லை. ஆனால் நெருக்கடியானச் சூழலில் மக்கள் விரும்பாத தீர்மானமொன்றை எடுப்பதற்கு அரசாங்கம் தள்ளப்படுகிறது என்று அவர் தெரிவித்துள்ளார்.

