கொலைக்களமான இலங்கைக்கு திருப்பி அனுப்புவதை கண்டித்து புறுக்சால் (Bruchsal) நகரத்தில் இடம்பெற்ற கண்டன ஒன்றுகூடல்

365 0

இலங்கையில் தமிழர்களுக்கு எதிராக இடம்பெறுகின்ற இனவழிப்பில் இருந்து தத்தமது உயிர்களைப் பாதுகாத்துக்கொள்ள யேர்மன் நாட்டின் ஏதிலி கோரிக்கைக்காக விண்ணப்பித்த தமிழர்களை மனிதநேயமின்றி கொலைக்களமான இலங்கை நாட்டிற்கு மீண்டும் திருப்பி அனுப்புவதை கண்டித்து போர்ஸ்கைம் (Pforzheim) மற்றும் கால்சுறு (Karlsruhe) நகரங்களில் தமிழர்களால் கண்டன ஒன்றுகூடல் இடம்பெற்றது.

அதன் தொடர்ச்சியாக 08.06.2021 அன்று புறுக்சால் (Bruchsal) நகரத்தில் காலை 11:00 மணியில் இருந்து 13:00 மணிவரை கண்டன ஒன்றுகூடல் இடம்பெற்றது.

இந்த கண்டன ஒன்றுகூடலில் தமிழர்களுடன் யேர்மன் நாட்டு குடும்பம் ஒன்று இணைந்துக் கொண்டு தமது இனத்தவர்களுக்கும் வேற்றினத்தவருக்கும் தமிழர்களின் துயரத்தையும் இன்றைய நிலையை விளங்கப்படுத்தியதோடு கண்டன ஒன்றுகூடலில் செய்தி சேகரிக்க வருகை தந்த BNN பத்திரிகையின் செய்தியாளருக்கு தமிழர்களின் அவலம் தொடர்பாக பேட்டி கொடுத்தனர் என்பது குறிப்பிடத்தற்கதாகும்.

இன்றைய கண்டன ஒன்றுகூடலில் ‘தமிழர்களை ஏன் இலங்கை நாட்டுக்கு திருப்பி அனுப்ப கூடாது’ என்ற விளக்கம் அடங்கிய துண்டுப்பிரசுரங்கள் வேற்றின மக்களுக்கு வழங்கி விளக்கமளிக்கப்பட்டது. இறுதியாக தமிழரின் தாரக மந்திரத்துடன் இன்றைய கண்டன ஒன்றுகூடல் நிறைவுப்பெற்றது.