நீதி அமைச்சர் இந்த நாட்டில் நீதியை நிலைநாட்டுவாரா?- பா.அரியநேத்திரன்(படங்கள்)

432 0

625-0-560-320-160-600-053-800-668-160-90-1எமது நாட்டின் நீதி அமைச்சர் இந்த நாட்டில் நீதியை நிலைநாட்டுவாரா? என்ற சந்தேகம் எமது மக்கள் மத்தியில் இன்று எழுந்துள்ளது என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன் தெரிவித்தார்.

கொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் கணபதிப்பிள்ளை தேவராசாவின் 31 ஆவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு இன்று ஆலையடிவேம்பு கலாச்சார மண்டபத்தில் அம்பாறை மாவட்ட தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியத்தின் ஏற்பட்டில் நடைபெற்ற போது அதில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர்  கூறுகையில், இலங்கை போராட்ட வரலாறு என்பது ஊடகவியலாளர்களை இலக்கு வைத்து தாக்குதல்கள் நடத்தப்பட்ட கால கட்டமாகத்தான் இருந்து வருகின்றது. 1958 ஆம் ஆண்டு காலப் பகுதியில் தந்தை செல்வா அகிம்சை வழியில் போராடிக் கொண்டு இருந்த கால கட்டமாகும். இக்கால கட்டத்திலும் ஊடகத்திற்கான அச்சுறுத்தல் நடைபெற்றிருந்தது. அதாவது சுதந்திரன் பத்திரிகை தடைப்பட்டு இருந்தது

ஆனால் தேவராசா அவர்கள் படுகொலை செய்யபப்பட்ட காலமானது 1985 ஆம் ஆண்டு காலப் பகுதியாகும். இக்காலப் பகுதி என்பது ஆயுதப் போராட்டத்திற்கான காலப் பகுதியாகும். இந்தப் பகுதியில் தமிழரின் நீதியான உண்மையான விடயங்களை வெளிக் கொணரக் கூடாது என்பதற்காகவே இந்த சிறி லங்காக இராணுவம் இந்த ஊடகவியலாளரை கொலை செய்திருக்கலாம்

விடுதலைப் புலிகள் தமது போராட்டங்களை ஐந்து வகையாக பிரித்து போராட்டங்களை நடாத்தியிருந்தனர். அதில் ஒரு முறையான கொரிலா போர் முறையினை ஆரம்பித்த காலமாக இக்காலம் காணப்படுகின்றது. இக்காலத்தில் தமிழ் இளைஞர்கள் உள்ளே அழைத்து செல்லப்பட்டால் உயிருடன் வெளிவரா முடியாத முகாமாக கொண்ட வெட்டுவான் இராணுவ முகாம் அமைந்து காணப்பட்டமை உலகறிந்த உண்மையாகும். இந்த முகாமுக்கு அழைத்து செல்லப்பட்டே ஊடக வியலாளர் தேவராசாவும் கொலை செய்யப்பட்டுள்ளார்.

இக்காலப் பகுதியில் தமிழரின் பிரச்சினைகள் வெளிவந்தால் தங்களுக்கு ஆபத்தாகி விடும் என்பதற்காகவே திட்டமிட்டு இந்த ஊடகவியலாளரின் கொலை இடம் பெற்றுள்ளது. முப்பத்தொரு வருடங்கள் மறைந்து கிடந்த இந்த ஊடகவியலாளரின் படுகொலை தற்போது வெளிக் கொணரப்பட்டுள்ளது என்றால் அது நல்ல விடயமாகும். தற்காலத்தில் ஊடகவியலாளர்கள் கொலை செய்யப்படா விட்டாலும் ஊடகவியலாளர்களுக்கு அச்சுறுத்தல்கள் மற்றும் ஊடகவியலாளர்களை இனவாதிகளாகச் சித்தரிக்கின்ற தன்மை இடம் பெற்றுக் கொண்டுதான் இருக்கின்றது.

நாட்டில் நீதியை நிலைநாட்டுகின்ற நீதி அமைச்சர் இந்த நாட்டில் நீதியினை நிலைநாட்டுவதற்காகச் செயற்பட்டுக் கொண்டு இருக்கின்றாரா? என்ற கேள்வி தற்போது அனைவரின் மத்தியில் எழுந்துள்ளது. காரணம் அண்மையில் மட்டக்களப்புக்கு விஜயம் ஒன்றினை மேற்கொண்டிருந்த நீதி அமைச்சர் அண்மைக் காலமாக இன முரண்பாடுகளை ஏற்படுத்தும் வகையில் செற்பட்டுக் கொண்டு இருக்கும் புத்த பிக்கு ஒருவருக்கு நற்சான்றிதழ் வழங்கிச் சென்றுள்ளார்.

அதாவது மட்டக்களப்பில் சிங்கள மக்களின் குரலாக புத்த பிக்குவின் குரல் ஒலித்துக் கொண்டு இருப்பதாக கூறியிருக்கின்றமை மதக் கொள்கையினை நிலை நாட்டுகின்ற ஒருவர் மக்கள் பிரதிநிதிகளின் வேலையை செய்வதற்கு வழி வகுத்துள்ளது. அது மாத்திரமின்றி ஒரு பொய்யினையும் கூறிச் சென்றுள்ளார். அதாவது யுத்த காலத்திற்கு முன்னர் 28,000 சிங்கள மக்கள் மட்டக்களப்பில் வாழ்ந்ததாக கூறியிருக்கின்றார். புள்ளி விபரத்தின்படி 1981 ஆம் ஆண்டு 10604 மக்களே இங்கு வாழ்ந்துள்ளனர்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினராகிய நாங்கள் சிங்கள மக்கள் மட்டக்களப்பில் வாழ்ந்துள்ளனர் என்பதனை ஒரு போதும் மறுக்கவில்லை. அவர்கள் குடியேற வேண்டும் என்பதனையும் மறுக்கவில்லை. அதற்கு நாங்கள் ஆதரவு வழங்குவோம். இருந்தும் இதனைப் பயன்படுத்தி அதிகமான மக்களை கொண்டு வந்து திட்டமிட்டு குடியேற்றுவதனை நாங்கள் அனுமதிக்க மாட்டோம். இதனையே அந்த அமைச்சருக்கு கூறிவைக்க விரும்புகின்றேன்.

எமது தலைவர் சம்பந்தன் எமது மக்களின் தீர்விக்காக சட்ட நிர்ணய சபையூடாக வடகிழக்கு இணைந்த ஒரு தீர்வினை முன்வைத்து அதற்பால் செயற்பட்டுக் கொண்டு இருக்கின்றார். இந்த அரசியல் தீர்வினை பெறுவதற்காக நாங்கள் அனைவரும் சம்பந்தனின் கரங்களை பலப்படுத்த வேண்டும்.

இன்று சிலர் 2016 ஆம் ஆண்டில் தீர்வு பெற்றுத் தருவதாக சம்பந்தன் கூறிய கருத்து பொய்த்து விட்டதாக விமர்சனம் செய்து வருகின்றனர். கால நிர்ணயம் என்பது அனைத்து தலைவர்களாலும் முன்வைக்கப்படுவது ஒரு சாதாரண விடயமாகும். எமது தேசிய தலைவரும் அடிக்கடி தனது உரையில் கால நிர்ணயத்தை முன்வைப்பதுண்டு. எனவே இதை எவரும் விமர்சனம் செய்ய வேண்டிய அவசியமில்லை எனத் தெரிவித்தார்.

இந்த நிகழ்வில் அதிதியாக அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கோடீஸ்வரன், மாகாணசபை உறுப்பினர் கலையரசன் ஆகியோர் கலந்து கொண்டனர்

625-0-560-320-160-600-053-800-668-160-90-2 625-0-560-320-160-600-053-800-668-160-90-4 625-0-560-320-160-600-053-800-668-160-90