வேலூர் ஜெயிலில் உள்ள நளினி, முருகனுக்கு பரோல் கிடைப்பதில் சிக்கல்

211 0

வேலூர் ஜெயிலில் உள்ள நளினி, முருகனுக்கு பாதுகாப்பு அளிக்க முடியாத சூழல் உள்ளதாக போலீசார் அறிக்கை அனுப்பி உள்ளதால் அவர்களுக்கு பரோல் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கு கைதி முருகன் வேலூர் ஆண்கள் ஜெயிலிலும், அவரது மனைவி நளினி பெண்கள் தனிச்சிறையிலும் அடைக்கப்பட்டுள்ளனர். சென்னையில் உள்ள நளினியின் தாயாருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டதால் அவரை உடனிருந்து கவனிக்கவும், முருகனின் தந்தை கடந்த ஆண்டு இறந்ததால் இறுதி சடங்குகள் செய்யவும் இருவரும் 30 நாட்கள் பரோல் கேட்டு மனு அளித்துள்ளனர். இருவரின் மனுக்களும் பரிசீலனையில் இருப்பதாக ஜெயில் அதிகாரிகள் தெரிவித்தனர்.இதனிடையே இருவரும் காட்பாடி பிரம்மபுரத்தில் தங்க உள்ளதாக மனுவில் தெரிவித்துள்ளதால், அந்த இடத்தின் பாதுகாப்பு மற்றும் வசதி குறித்து ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என சிறைத்துறை, மாவட்ட காவல்துறைக்கு உத்தரவிட்டது.

அதன்படி காட்பாடி துணை போலீஸ் சூப்பிரண்டு ரவிச்சந்திரன் தலைமையில் போலீசார் ஆய்வு மேற்கொண்டனர். இதைத்தொடர்ந்து, தற்போது கொரோனா பரவல் அதிகம் உள்ளது. மேலும் அனைத்து போலீசாரும் கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். முருகன், நளினி இருவருக்கும் உயர் பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்பதால் அதற்கான போலீசார் பற்றாக்குறை மற்றும் பாதுகாப்பு அளிக்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளதாக போலீசார் சார்பில் சிறைத்துறைக்கு அறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.

இதன் காரணமாக இருவருக்கும் பரோல் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.