மெய்நிகர் நூலகம் (இணையவழி) திறப்புவிழா (யாழ் பொதுநூலகத்தின் 40ஆம் ஆண்டு நினைவின் வலியோடு)

580 0

செய்தி வெளியீடு

மெய்நிகர் நூலகம் (இணையவழி) திறப்புவிழா
(யாழ் பொதுநூலகத்தின் 40ஆம் ஆண்டு நினைவின் வலியோடு)

உலகப்பரப்பில், புலம்பெயர்ந்து வாழும் தமிழர்களின் இரண்டாம் தலைமுறை இளையோர்கள், இலங்கைதீவின் வடக்கு-கிழக்கில் வாழும் ஈழத்தமிழர்களின் மரபின் தொடர்ச்சியாகவும், தமிழீழ மக்களின் நல்லாசியுடனும், தமிழ்நாட்டுத் தமிழர்களின் வாழ்த்துக்களோடும், வருகிற மே 30ஆம் நாள் (2021) அன்று, யாழ் பொது நூலக எரிப்பின் 40ஆம் ஆண்டு நினைவின் வலிகளை எடுத்தியம்பும் விதமாக, இணையவழியில் மெய்நிகர் நூலகத் திறப்புவிழா மேற்கொள்கிறோம்.

யாழ் நூலகம், தமிழர் தேசத்தின் அறிவுக்களஞ்சியமாகவும் தமிழர் சிந்தனையை வளர்த்தெடுத்த பேரியக்கமாகவும் விளங்கியது.

1981ஆம் ஆண்டு, மே 31 ஆம் நாள் இரவில், தமிழர்களின் வரலாறுகளையும் தொன்மங்களையும் சுமந்திருந்த ஓலைச்சுவடிகளோடும் 96000ற்கும் மேற்பட்ட நூல்களையும் கொண்டு, தென் ஆசியாவின் பெரிய ‘வரலாற்று நூலகம்’ என உலகப் புகழ்ப்பெற்றிருந்த யாழ் நூலகத்தினை, சிங்கள காடையர்கள் சிங்கள அரசியல்வாதிகளின் தூண்டுதலால் எரித்து சாம்பலாக்கினர். கிடைப்பதற்கரிய வரலாற்று நூல்களும் ஆவணங்களும் இனி தமிழர் கைகளுக்கு எப்பொழுதும் கிடைக்கவே கூடாது என்ற சிங்களப் பேரினவாதத்தின் நோக்கம் நிறைவேறியது எனலாம். தமிழர்களின் தேசத்தினையும் இறையாண்மையையும் அழித்த அதே சிங்கள சிந்தனைவாதம், தமிழர்களின் பண்பாட்டு அடையாளங்களையும் தொன்மைங்களையும் அழித்து பண்பாட்டு இனவழிப்பின் முக்கிய நிகழ்வையும் பதிவு செய்தது. கொடூரமான மனித குல பேரழிப்பினை சிங்கள பேரினவாதம் நிகழ்த்தியபொழுது வேடிக்கை பார்த்த சர்வதேச சமூகம் யாழ் நூலக எரிப்பின் பண்பாட்டு இனவழிப்பின் பொழுதும், 40ஆண்டுகள் கடந்த பின்பும், அதே அமைதியோடு வேடிக்கைப் பார்க்கிறது.

இனவழிப்புப் போரின் தொடர்ச்சியாக, இலங்கைத் தீவினுள் இருக்கும் தமிழர் தேச, தமிழர் வரலாற்று அடையாளங்களையும், இணையவழியில் ஆங்காங்கே இருக்கும் தகவல்கள், ஆவணங்கள் மற்றும் காணொலிகளையும் திட்டமிட்ட வகையில், சிங்களப் பேரினவாதமும் அதன் கூட்டாளி நாடுகளும் தொடர்ந்தும் அழித்து வருகிறது.

இத்தகைய பின்னணியில் இருந்து, யாழ் நூலக எரிப்பின் 40ஆம் ஆண்டு நினைவின் நிகழ்வாகவும், தமிழர்கள் புலம்பெயர்ந்து நாடுகளில் பிறந்து, வளரும் இரண்டு தலைமுறை இளையோர்களின் பெரும் முயற்சியில், தமிழர்களின் வரலாறு, தேசிய, இறையாண்மை அடையாளங்கள் கொண்ட அரசியல் ஆவணங்கள், நூல்கள், தமிழர் பண்பாடு, தொல்லியல் ஆவணங்கள் என பலவற்றையும் வரிசைப்படுத்தி, இணையவழியில் நூலகமாக உருவாக்கியுள்ளனர்.

நூலகத் திறப்பின் பின்னரும், தொடர்ந்து அதனை மேம்படுத்த வேண்டியுள்ள பல பணிகள் காத்திருப்பதால், , எம் மெய்நிகர் நூலகத்தினை தரம் உயர்த்தவும், வழிகாட்டவும், எமது அடுத்தடுத்த தலைமுறைகள் தமிழர்களின் வரலாற்றினை படித்து அறிந்துக்கொள்ளும் நம்பகமான தளமாக மாற்றவும் இணையவழியில் எம்மோடு இணைந்து தன்னார்வலர்கள் முன்வர அழைப்புவிடுக்கிறோம்.
Tamil Eelam Library Team

Website: www.telibrary.con
Email: telibrary.com@gmail.com
Instagram: @te_library
Facebook: telibrary