அந்தப் பார்வை சொல்லிய பாதை …!-அகரப்பாவலன்

14671 0

அந்தப் பார்வை சொல்லிய பாதை …!

பாலச்சந்திரன் …!

அந்தக்கண்கள் …
அந்தப் பார்வை … அதற்குள்
எத்தனை அர்த்தம் …
எத்தனை காட்சி …
எத்தனை ஆழம் …புதைந்துள்ளது …

அது எல்லாம் உணர்ந்த ஞானியின் கண்களா ? – அல்லது
எல்லாம் துறந்த துறவியின் கண்களா ?
அவன் வயதில் பாலகன் …! ஆனால் …
உள்ளத்தில் ஓர் போர் நெருப்பு !

அவன் போர் ஞானியின் மரபில் உதித்த
இளஞ் சூரியன் அல்லவா !
அவன் பிறந்தது ..தவழ்ந்தது …வளர்ந்தது …
எல்லாம் போர் விளைந்த அனல் பூமியில் தானே !

எத்தனை அண்ணன்மார்கள் …!
எத்தனை அக்காமார்கள் …! அத்தனைபேரும் போராளிகள் …!
அவன் பார்த்தது …நடந்தது …விளையாடியது …
எல்லாம் போர் சூழலின் வீதியில் தானே …

“இளமையில் கல் சிலையில் எழுத்து ”
அவன் ஆழ்மனதில் பதிந்ததும் அதுதானே !
தந்தை !
உலக வல்லரசுகளையே நடுங்கவைத்த
தமிழீழத் தலைவன் !
தாய் !
தலைவனையும் …போராளிகளையும்
பராமரித்த போர்த் தாய் !
அண்ணன் !
தலைவன் ஆணையின் பார்வைக்கு
கணையாய் நின்று களமாடி வீரச்சாவெய்திய மறவன் !

அக்கையார் !

அன்பும் ..பாசமும் காட்டிவளர்த்த வீரமறத்தி ..!

அவன் வீர மரபை துல்லியமாக உணந்து பயந்தனர்
சிங்கள இனவெறி அரக்கர்கள்!

குடும்பத்தையே …போர் அக்கினியில் ஆகுதியாக்கிய
தலைவனின் மரபல்லவா பாலச்சந்திரன் …
இப்படியொரு தலைவனை பார்க்கமுடியுமா இவ்வையகத்தில் ?

அவனை விடலாமா ?முடியாது!
விட்டால் …! இவன் அடுத்த பிரபாகரன் !
இதுதானே இந்த சிங்கள கொடியோரின்
இனவெறிப்புத்தியின் கொதிப்பு …!

கடைசியாக …ஒருதுண்டு பாண் …
ஒருகுவளை தேநீர் ! அதை அந்த வீரமறவன்
மிக நிதானமாக சுவைத்து உண்ணுகிறான் …
அவன் பன்னிரண்டு வயது பாலகன் …!
அவனுக்கு ஒன்றும் புரியவில்லையா ?
அதற்காகத்தான் அவன் மௌனமாக இருந்தானா ?
இல்லவே …இல்லை …

அவன் …எத்தனை குண்டுகளை கண்டிருப்பான் …
எத்தனை போரைக் கண்டிருப்பான் ….
எத்தனை சாவைக் கண்டிருப்பான் …
எத்தனை பதுங்கு குழிகளைக் கண்டிருப்பான் …
எத்தனை தரம் இடம் மாறியிருப்பான் …

அவனக்கு … சாவைத் தெரியும் …
அழிவைத் தெரியும் …
விழுப்புண்களைத் தெரியும் …
சிங்கள இனவெறி ராணுவத்தையும் தெரியும் …

இவைகள் அனைத்தையும் தெரிந்து …புரிந்த …
வீர மறவன்தான் “பாலச்சந்திரன் ”

சிங்கள ராணுவம் தன்னை என்னசெய்யும் ! – என்பதை
அவன் உள்ளுணர்வு சொல்லியிருக்கும் …!

அந்தப்பார்வை விரக்தியில் தோன்றியதல்ல …!
அந்தப்பார்வை பயத்தில் தோன்றியதல்ல …!
அந்தப்பார்வை தெளிந்த நிதானத்தில் மட்டுமே தோன்ற முடியும் …!

அந்தப்பார்வை சொல்லியது இதுதான் …

” நான் சாகலாம் தமிழீழ தாகம் அழியாது ”

சாகப்போவது தெரிந்தும் … பயம்கொள்ளாது …
சாவை வீரமரபோடு ஏற்று நின்ற வீரமறவனின் நெஞ்சில் …
ஐந்து குண்டுகள் பாய்ந்தது …உடல் மண்ணில் சரிந்தது …
உயிர் வானில் கலந்தது … அந்த வீரமறவனை
நெஞ்சினில் மட்டுமே சுடமுடிந்தது சிங்கள வெறியர்க்கு …
முதுகிலல்ல ……! அது உணர்த்தியது அவன் வீர மறவன்னென்று …

“பாலச்சந்திரனின் பார்வை காட்டிய பாதை தமிழீழம் ”

அகரப்பாவலன்.