ஜேர்மன் தலைநகர் பேர்லினில் அண்மையில் கிறிஸ்மஸ் சந்தையில் மேற்கொள்ளப்பட்ட ட்ரக் வண்டித் தாக்குதலிற்கு பின்னர் நேற்று (வியாழக்கிழமை) தொடக்கம் மீண்டும் கிறிஸ்மஸ் சந்தைகள் உயிர்பெற்றுள்ளன.
கடந்த திங்கட்கிழமை இரவு பேர்லின் கிறிஸ்மஸ் சந்தையில் மேற்கொள்ளப்பட்ட ட்ரக் வண்டித் தாக்குதலால் சுமார் 12 பேர் வரை கொல்லப்பட்டு 50இற்கும் மேற்பட்டோர் காயமடைந்திருந்தனர்.
இந்த நிலையில், களைகட்டிய கிறிஸ்மஸ் கொண்டாட்டங்கள் சோகத்தின் வசப்பட ஜேர்மன் ஒரு வித அச்சத்தின் வசப்பட்டது. இந்த நிலையில், மீண்டும் தற்போது குறித்த சந்தைகள் உயிர்பெற்றுள்ளதுடன், மெல்ல மெல்ல கிறிஸ்மஸ் கொண்டாட்டங்களும் புத்துயிர் பெற்றுள்ளன.
மேலும், குறித்த சந்தையின் நுழைவாயிலில் மெழுகுவர்த்திகள் ஏற்றப்பட்டு மலர்களும் வைக்கப்பட்டுள்ளன. அதேவேளை, ‘வெறுப்பை விட அன்பு வலுவானது’, ‘ஜேர்மன் மக்கள் திடமானவர்கள், அவர்கள் ஒருவருக்கு ஒருவர் துணையாக இருப்பர்’ போன்ற வாசகங்களும் அப்பகுதியில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.
அதேவேளை, அப்பகுதிக்கு வருகைதரும் பல ஆயிரக்கணக்கான மக்களும் அன்றைய தாக்குதலில் உயிரிழந்தோருக்கு அஞ்சலி செலுத்திவருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

