துருக்கி வீரர்களை உயிருடன் எரித்துக் கொன்று ஐ.எஸ். தீவிரவாதிகள் அட்டூழியம்

232 0

201612231033580806_islamic-state-video-shows-turkish-troops-burned-alive_secvpfஅலெப்போ நகரில் நடைபெற்ற உச்சகட்டப் போரின்போது தங்களிடம் பிடிபட்ட துருக்கி நாட்டு வீரர்களை ஐ.எஸ். தீவிரவாதிகள் உயிருடன் எரித்துக் கொல்லும் கொடூர வீடியோ வெளியாகியுள்ளது.

சிரியாவில் அதிபர் பஷர் அல் ஆசாத்தை பதவியில் இருந்து நீக்குவதற்காக கடந்த ஆறாண்டுகளாக உள்நாட்டுப்போர் நடந்து வருகிறது. அங்குள்ள கிழக்கு அலெப்போ நகரை கிளர்ச்சியாளர்களிடம் இருந்து மீட்பதற்காக கடுமையான சண்டை நடந்து வந்தது. நகரின் பெரும்பான்மையான பகுதிகளை அதிபர் பஷார் அல் ஆசாத்தின் படைகள் மீட்டு விட்டன.

இதற்கிடையே அலெப்போவில் போரை முடிவுக்கு கொண்டு வரும் வகையில், அதிபர் ஆதரவு படைகளுக்கும், கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே சண்டை நிறுத்தம் செய்வதற்காக துருக்கியும், ரஷியாவும் முயற்சி மேற்கொண்டன.அதில் அதிபர் ஆதரவு படைகளுக்கும், கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே சண்டை நிறுத்த உடன்பாடு ஏற்பட்டது.

இந்த உடன்பாட்டின்படி கிழக்கு அலெப்போ நகரில் இருந்து கிளர்ச்சியாளர்களும், பொதுமக்களும் வெளியேறிய பின்னர் அலெப்போ நகரம் அரசுப் படைகளின் முழுமையான கட்டுப்பாட்டின்கீழ் வந்ததாக நேற்று அறிவிக்கப்பட்டது.இந்நிலையில், அலெப்போ நகரில் நடைபெற்ற உச்சகட்டப் போரின்போது தங்களிடம் பிடிபட்ட துருக்கி நாட்டு வீரர்களை ஐ.எஸ். தீவிரவாதிகள் உயிருடன் எரித்துக் கொல்லும் கொடூர வீடியோ வெளியாகியுள்ளது.

ஐ.எஸ். தீவிரவாதிகளே வெளியிட்டதாக கூறப்படும் இந்த வீடியோவில், கூண்டுக்குள் அடைத்து வைக்கப்பட்டுள்ள இரு வீரர்களின் கால்களை சங்கிலியால் கட்டி, நாயை நடக்கவைத்து அழைத்துச் செல்வதுபோல் ஒரு தீவிரவாதி பாலைவனத்தின் மையப்பகுதிக்கு கொண்டு செல்கிறான்.

பின்னர், அவர்களை நிற்க வைத்திருக்கும் இடத்தின் பின்னால் பொருத்தி வைக்கப்பட்டுள்ள சிறியரக வெடிகுண்டினை ரிமோட் மூலம் வெடிக்கச் செய்கிறான். அதில் இருந்து புறப்பட்ட தீப்பிழம்புகள் துருக்கி வீரர்களை கட்டி வைத்துள்ள சங்கிலி மூலம் முன்நோக்கிச் சென்று அவர்கள் இருவரையும் பொசுக்கும் காட்சி மட்டும் பாதியிலேயே நிறுத்தப்படுகிறது.

இன்று வெளியான இந்த கொடூர வீடியோ துருக்கி மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதன் காரணமாக நாட்டில் வன்முறை பரவாமல் தடுக்கும் வகையில் சமூக வலைத்தளங்களுக்கு துருக்கி அரசு இன்று திடீர் தடை விதித்துள்ளது.