தொழில் உரிமைகளை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க கோரிக்கை!

246 0

பெருந்தோட்ட கம்பனிகள் 1,000 ரூபா சம்பள அதிகரிப்பை வழங்குவதற்கு அரசாங்கம் உத்தரவிட்டதை தொடர்ந்து, தொழிலாளர்கள் மீது பல்வேறு சுமைகளை சுமுத்தி வருகின்றது.

இது தொடர்பாக தொழில் ஆணையாளர் பெருந்தோட்ட கம்பனிகளையும் தொழிற்சங்கங்களையும் அழைத்து பேச்சுவார்த்தை ஒன்றை முன்னெடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மலையக மக்கள் முன்னணி மலையக தொழிலாளர் முன்னணியின் தலைவரும் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான வேலுசாமி இராதாகிருஷ்ணன் தொழில் ஆணையாளருக்கு எழுதியுள்ள கடிதம் ஒன்றில் குறிப்பிட்டுள்ளார்.

இந்த கடிதத்தில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, பெருந்தோட்ட கம்பனிகள் 1,000 ரூபா சம்பள அதிகரிப்பின் பின்பு தொழிலாளர்கள் மீது அவர்களுடைய தொழில் மற்றும் தொழிலாளர் உரிமைகள் தொடர்பாக மிகவும் கடுமையாக நடந்து கொள்கின்றார்கள்.

தொழிலாளர்களை அடிமைகளை நடத்துவது போல நடத்த முற்படுகின்றார்கள். ஒரு சில தோட்ட அதிகாரிகள் அடாவடித்தனமாகவும் தொழிலாளர்கள் தங்களுடைய அடிமைகள் எனவும் நினைத்து செயற்படுகின்றார்கள். இது தொடர்பாக தொழிலாளர்கள் தொடர்ந்தும் எங்களுடைய கவனத்திற்கு கொண்டு வந்துள்ளார்கள்.

எனவே, தொழிலாளர்களின் நலன் சார்ந்த தொழிற்சங்கம் என்ற அடிப்படையில் நாங்கள் இவற்றை பார்த்துக் கொண்டிருக்க முடியாது. குறிப்பாக கீழே குறிப்பிடப்பட்டுள்ள விடயங்களில் பெருந்தோட்ட கம்பனிகள் பாராமுகமாக செயற்படுகின்றார்கள்.

1. ஒரு நாள் சம்பளத்திற்கான வேலைப்பழுவை அதிகரித்திருக்கின்றார்கள்.

2. நிரந்தர தொழிலாளர்களுக்கும் தற்காலிக தொழிலாளர்களுக்கும் இடையில் சம்பள முரண்பாட்டை ஏற்படுத்தி இருக்கின்றார்கள். அதாவது தற்காலிக தொழிலாளர்களுக்கு 1,000 ரூபா வழங்காமல் அவர்களுக்கு 730 ரூபாவையே நாட் சம்பளமாக வழங்கி வருகின்றார்கள்.

3. தொழிலாளர்களுக்கு மாதாந்தம் போதுமான வேலை வழங்காமை.

4. சமூக நல உத்தியோகஸ்தர்கள் மற்றும் சிறுவர் பராமரிப்பு உத்தியோகஸ்தர்களை நியமிக்காதிருத்தல்.

5. மேலதிகமாக எடுக்கப்படுகின்ற கொழுந்திற்கு வழங்கப்படுகின்ற கொடுப்பனவை வழங்காதிருத்தல்.

6. பெருந்தோட்டங்களை சுத்தப்படுத்தாமல் இருத்தல்.

7. பெருந்தோட்ட பகுதிகளில் தொழிலாளர்களுக்கு தெரியாமல் வெளியாருக்கு குத்தகைக்கு வழங்கள்.

8. தோட்டங்களில் உள்ள மருத்துவ வசதிகளை ஏற்படுத்தி கொடுக்க நடவடிக்கை எடுக்காமை.

9. வயது முதிர்ந்த வேலையை விட்டு விலகிச் சென்றவர்களுக்கு இதுவரை காலமும் அவர்களுக்கு வழங்கிய தேயிலை தூள் இடை நிறுத்தப்பட்டுள்ளமை.

10. தொழிலாளர்களுக்கு சமூக நல சேமநல உதவிகளை இடைநிறுத்தியுள்ளமை.

11. தொழிலாளர்களின் தொழிற்சங்க உரிமைகளை மறுக்கின்ற வகையில் தொழிற்சங்க சந்தாவை நிறுத்தியுள்ளமை.

இது போன்ற பல விடயங்களை தோட்ட கம்பனிகள் இடைநிறுத்தியுள்ளதுடன் தொழிலாளர்களை சுமுகமாக வேலை செய்வதற்கான ஒரு சூழலையும் இல்லாது செய்துள்ளார்கள்.

எனவே, இந்த விடயம் தொடர்பாக தாங்களுடைய தலைமையில் கொழும்பில் பேச்சுவார்த்தை ஒன்றை ஏற்பாடு செய்து இந்த முரண்பாடுகளை சுமுகமாக தீர்த்துக் கொள்வதற்கு நடவடிக்கை எடுக்குமாறு தாங்களை கேட்டுக் கொள்வதுடன்.

மேற்குறித்த விடயம் தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்க தவரும் பட்சத்தில் தொழிலாளர்கள் பொறுமை இழந்து அமைதியற்ற ஒரு நிலைமை ஏற்படலாம். எனவே, இது தொடர்பாக உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதுடன்.

இந்த கடிதத்தின் பிரதிகளை,

1. -மஹிந்த ராஜபக்ஷ
2. தொழில் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா
3. பெருந்தோட்டத்துறை அமைச்சர் ரமேஷ் பத்திரன
4. பெருந்தோட்ட கட்பனிகளின் பிரதான நிறைவேற்று அதிகாரிகள் ஆகியோருக்கும் கடிதங்களின் பிரதிநதிகள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.