போரில் உயிரிழந்த மக்களுக்கு அஞ்சலி செலுத்த புதிய ஜனநாயக மாக்சிச லெனினிசக் கட்சி அழைப்பு

414 0

இலங்கையில் முப்பது வருடங்களாக நீடித்த இன ஒடுக்குமுறைப் போரில் சுமார் மூன்று லட்சத்திற்கு மேற்பட்ட தமிழ், முஸ்லிம், மலையகத் தமிழ் மக்களும் ,சிங்கள மக்களும் கொல்லப்பட்டனர். அவர்களில் அனேகர் உழைக்கும் மக்களாவர்.

இறுதிப் போரின்போது முள்ளிவாய்க்காலில் பல்லாயிரம் தமிழ் மக்கள் கொத்துக் கொத்தாகக் கொல்லப்பட்டனர். இவ்வாறு கொல்லப்பட்ட அனைவரையும் போர் முடிவுக்கு வந்த தினமான 2009 மே 18 இன் பின்வரும் வருடங்களில் அதே நாளில் நினைவு கூர்ந்து அஞ்சலி செலுத்துவது மக்களின் அடிப்படை உரிமையும், மனிதநேயக் கடமையுமாகும்.

அந்த வகையில் எதிர்வரும் 18 ஆம் திகதி அன்று இன்றைய கோவிட் வைரஸ் பரவலைக் கருத்திற்கொண்டு, சுகாதார பாதுகாப்பு வழிமுறைகளைப் பின்பற்றி, கொல்லப்பட்ட மக்களுக்கு நினைவுச் சுடர் ஏற்றி அஞ்சலி செலுத்துவோம் என புதிய ஜனநாயக மாக்சிச மாக்சிச லெனினிசக் கட்சியின் அரசியல் குழு வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.

அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

மேற்படி சுடர் ஏற்றி நினைவு கூர்வதை வெறுமனே சம்பிரதாயமாகவோ அல்லது குறுகிய தேசிய வாதத்தை வளர்ப்பதற்காகவோ முன்னெடுத்தல் ஏற்புடையதல்ல.

போர் முடிவுற்றுப் பன்னிரண்டு ஆண்டுகளாகியும் நீடித்து வரும் தேசிய இனப்பிரச்சினைக்கு இதுவரை தீர்வு எட்டப்படவில்லை. நாடாளுமன்ற ஆட்சியிலும் நிறைவேற்று அதிகாரக் கதிரையிலும் பதவிக்கு வந்த எவரும் தேசிய இனப்பிரச்சினைக்குத் தீர்வு காண முன்வரவில்லை. அதற்குக் காரணம் அத்தகையோர் மேட்டுக்குடி ஆளும் வர்க்க சக்திகளாகவும் ,சிங்கள பௌத்த பேரினவாதிகளாகவும் இருந்து வந்தமையாகும்.

இத்தகையவர்களோடு தமிழ் உயர் வர்க்க மேட்டுக் குடியினரும் முஸ்லிம், மலையக உயர் வர்க்கப்பிரிவினரும் இணைந்திருந்தே வந்துள்ளனர். அத்தகையோரின் ஆளும் வர்க்கத் தேவைக்கும் அந்நிய சக்திகளின் இருப்புக்கும், விருப்புக்கும் ஏற்ப இனமுரண்பாடு போராக மாற்றப்பட்டது.

தமிழர் தரப்பில் முன்னெடுக்கப்பட்ட ஆயுதப்போராட்டமும் குறுகிய கொள்கை நிலைப்பாடுகளாலும் மக்கள்விரோத செயற்பாடுகளாலும் அந்நிய சக்திகளை நம்பியதாலும் தோற்கடிக்கப்பட்டது. இலங்கையின் தேசிய இனப் பிரச்சினை என்பது தமிழ், முஸ்லிம், மலையகத் தமிழர் மற்றும் பறங்கியர், வேடர் உள்ளிட்ட சிறுபான்மையினரை உள்ளடக்கிய பிரச்சினையாகும்.

எனவே ஐக்கியப்பட்ட இலங்கையில் சுயநிர்ணய உரிமை அடிப்படையிலான பிராந்திய சுயாட்சியும், சுயாட்சி உள் அமைப்புகளும் கொண்ட அரசியலமைப்பு வாயிலான அரசியல் தீர்வே சாத்தியமானதும் நடைமுறைக்கு உகந்ததுமாகும்.

இத்தீர்வினை வென்றெடுப்பது என்பது இலகுவான ஒன்றல்ல. உழைக்கும் மக்கள் புரட்சிகர வெகுஜனப் போராட்ட பாதையில் அணி திரள்வதே இன ஒடுக்குமுறையினைத் தகர்த்து முன் செல்வதற்குரிய அரசியல் மார்க்கமாகும்.

இத்தகைய தீர்வு முயற்சிகளுக்கும் வெகுஜனப் போராட்ட வழிமுறைகளுக்கும் தமிழ் உழைக்கும் மக்கள் அணிதிரளும்போது சிங்கள, முஸ்லீம், மலையக உழைக்கும் மக்கள் தமது ஆதரவையும், ஒத்துழைப்புகளையும் வழங்குவர்.

எனவே கொள்கையாலும் நடைமுறையாலும் போராட்ட வழிமுறைகளாலும் வெற்றி பெறக்கூடிய திசை நோக்கி பயணிப்பதற்கு போரில் கொல்லப்பட்ட பல ஆயிரக்கணக்கான மக்களின் நினைவு நாளில் உறுதி ஏற்போம் என சுட்டிக் காட்டப்பட்டுள்ளது.