முள்ளிவாய்க்கால் நினைவிட அழிப்பினை வன்மையாக கண்டிக்கின்றோம்!

216 0

தமிழ் மக்கள் மீதான அடக்கு முறையின் அதியுச்சமான முள்ளிவாய்க்கால் நினைவிட அழிப்பினை வன்மையாக கண்டிக்கின்றோம் என வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின் சங்கம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

இனப்படுகொலையின் அதியுச்ச துயரமாக எமது உறவுகளை தொலைத்துவிட்டு மனத்துயருடன் வாழும் நாம் எம்மக்களை வேரறுக்க இலங்கை அரசினால் படிப்படியாக மேற்கொள்ளப்பட்ட தமிழ் மக்கள் இனப்பாராம்பரியம் ,கட்டுக்கோப்பு மரபுரிமை வாழ்விட காணி உரிமைகள்,கல்வி கலை பண்பாட்டு விழுமியங்களூடாக சிதைத்து அழித்தொழித்து தமிழ் மக்களின் இருப்பை சீரழித்த இனப்படுகொலையின் உச்சக்கட்டமான யுத்தகாலத்தை நினைவு கூரவும், அதன் வலிகளை எமது இளைய சந்ததிக்கு கடத்தவும் உரித்துடையவர்கள்.

எமது இரத்த உறவுகள் ,என்று ?எந்த நேரத்தில்?,எப்படி ? இறந்தனர் என்றறியாது போரின் இறுதி நாளைக்கொண்டு நினைவு கூருகிறோம். அதற்காக முள்ளிவாய்க்கால் நினைவு த்தூபி முற்றத்தையே நினைவு கொள்கிறோம்.

சிங்கள அரசு காலங்காலமாக திட்டமிட்ட முறையில் தமிழ் இன அழிப்பை நடாத்திக்கொண்டிருக்கிறது. இவ் இன அழிப்பின் ஒரு படிமுறையாக இறுதிப்போரின் போது இனப்படுகொலையை மேற்கொண்டும், பல்லாயிரக்கணக்கானவர்களை காணாமல் போகவும் செய்துள்ளது. அதன் உச்சக்கட்ட  இன அழிப்பை 2009ம் ஆண்டு மே18 வரை நடாத்தியது.

இவ்வாறு ஒரு இனத்திற்கெதிராக மேற்கொள்ளப்பட்ட திட்டமிட்ட அழித்தொழிப்பை கைகட்டி மெளனியாக பார்த்துக்கொண்டிருந்த சர்வதேச சமூகம், நடைபெற்று முடித்த மனித அவலத்தின் பின் கூட இதுவரை “ஒரு சர்வதேச நீதியை”வழங்க முன்வராத காரணத்தினால் சிறிலங்கா அரசு துணிச்சலாக மீண்டும் மீண்டும் தனது அராஜகத்தை அரங்கேற்றி வருகின்றது.

சர்வதேச நியமங்களில் ஏற்றுக்கொள்ளப்பட்ட அடிப்படை உரிமையான “நினைவேந்தல்” உரிமையை தொடர்ச்சியாக மறுத்து வருகின்றது. அத்துடன் முள்ளிவாய்க்கால் முற்றத்தில் அமைக்கப்பட்டிருந்த நினைவுத்தூபியை மனித விழுமியங்களையும் மீறி வெளிப்படையாக சேதப்படுத்தப்பட்டதுடன், நினைவு கற் தூபியும் காணாமல் ஆக்கப்பட்டிருக்கின்றது.

எமது உறவுகளை காணாமலாக்கிய சிறிலங்கா அரச படைகள் இன்று எமது கற்தூபிகளை கூட விட்டுவைக்கவில்லை. சர்வதேச நீதிப் பொறிமுறையின் கீழ் சிறிலங்கா அரசினை பாரப்படுத்தாவிடின் இந்நிலையே ஏற்படும் என்பதினை ஐ. நா வின் 46 கூட்டத் தொடரின் போது எமது அறிக்கைகள் மற்றும் ஐ.நா ஆணையாளருக்கான கடிதங்களில் சுட்டிக்காட்டியிருந்தோம்.

நினைவேந்தலை மறுத்தலும் ,நினைவுச்சின்னங்களை அழித்தலும் ஒட்டுமொத்த தமிழ் இனத்திற்கு எதிராக மேற்கொள்ளப்படுகின்ற பாரிய மனித உரிமை மீறலாகும்.

இதனை எமது சங்கம் வன்மையாக கண்டிப்பதுடன் இவ்விடயத்தில் சர்வதேச சமூகம் இனிவருங்காலத்திலேனும் நேரடியாக தலையிட்டு இலங்கை வாழ் தமிழினத்திற்கு நீதியினை பெற்றுத்தர வேண்டும் என்று மீண்டும் எமது கோரிக்கையை முன்வைக்கிறோம்.

அத்துடன் முள்ளிவாய்க்கால் பொதுக்கட்டமைப்பினால் மற்றும் வடக்கு கிழக்கு தமிழ் ஆயர்களினால் விடுவிக்கப்பட்ட அழைப்பின் பிரகாரம் மே 18 மாலை 6 மணி மணி ஓசையின் பின் அகவணக்கம் செலுத்தி, வீடுகளின் முன் விளக்கேற்றி எமதினத்தின் மீது மேற்கொள்ளப்பட, தொடர்ச்சியாக மேற்கொள்ளப்படுகின்ற இனவழிப்பினை நினைவு கூறுவதுடன், அந்நாளில் காலை உணவினை தவிர்த்து, மதிய வேளையில் உப்பில்லாத முள்ளிவாய்க்கால் கஞ்சியினை உங்கள் வீடுகளில் பரிமாறி எமது துயரங்களையும், வடுக்களையும், நினைவுகளையும், வரலாறுகளையும் அடுத்த சந்ததிக்கு கடத்துமாறு அனைவரையும் வேண்டி நிற்கின்றோம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.