இராஜாங்க அமைச்சுக்குச் சொந்தமான கார் விபத்து

227 0
இராஜாங்க அமைச்சுக்குச் சொந்தமான கார் ஒன்று, மட்டக்களப்பு- கொம்மாதுறை பகுதியில் நேற்றிரவு (11) விபத்துக்குள்ளானதில் மூவர்  படுகாயமடைந்துள்ளனர் என ஏறாவூர் பொலிஸ் தெரிவித்தனர்.

இவ்விபத்தில் செங்கலடியைச் சேர்ந்த 21 வயது இளைஞர்கள் இருவர் மற்றும் 27 வயது இளைஞரொருவரும் காயமடைந்த நிலையில், செங்கலடி பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, மேலதிக சிசிச்சைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்கள்.

செங்கலடி பிரதேசத்திலிருந்து வாழைச்சேனை பகுதியை நோக்கிச் சென்று கொண்டிருந்த இந்தக் கார், வேகத்தைக் கட்டுப்படுத்த முடியாமல், வீதியின் மறுபக்கமாகச் சென்று, அங்கு நின்ற மோட்டார் சைக்கிள் மற்றும் சைக்கிளை மோதியுள்ளது.

அத்துடன், வீதியோர சுற்றுமதில் ஒன்றையும் பலத்த சேதப்படுத்தியுள்ளது.

காரை செலுத்திச் சென்றவர் மற்றுமொரு வாகனமொன்றை முந்திச் செல்ல முயற்சித்துள்ளதாக ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

அத்துடன், இந்தக் காரை ஓட்டிச் சென்றவர் இராஜங்க அமைச்சர் ஒருவரின் பிரத்தியேக இணைப்புச் செயலாளர் என விபத்தை நேரில் பார்த்த பிரதேச மக்கள் தகவல் தெரிவித்துள்ளனர்.

எனினும், விபத்துக்குள்ளான காரின் சாரதி சம்பவ இடத்தை விட்டுத் தப்பிச் சென்றுள்ளார்.

இது தொடர்பாக மேலதிக விசாரணைகளை ஏறாவூர் போக்குவரத்து பொலிஸார் மேற்கொண்டு வருவதோடு, விபத்தில் சேதமடைந்த கார், மோட்டார் சைக்கிள் மற்றும் சைக்கிளை மீட்டு,பொலிஸ் நிலையத்துக்கு கொண்டு சென்றனர்.