வரிசை கட்டிய வெற்றுடல்கள் ! -அகரப்பாவலன்.

340 0

வரிசை கட்டிய வெற்றுடல்கள் !

ஒழுக்கத்திற்கு வரிசையாக ..
நேர்மைக்கு வரிசையாக … ஏன் ?
வெற்றுடலான பின்பும் …
விதைக்கப்படுவதற்கு வரிசையாக
நேர்த்தியாக புதைக்கப்பட்டவர்களே தமிழர் …

ஆனால் …
அன்று அவர்கள் உயிரற்ற வெற்றுடல்களாய்
வன்னிமண்ணெங்கும் அனாதைப் பிணங்களாக
வரிசைப்படுத்திக் கிடந்தார்கள் …

ஆம் …
ஆரம்பத்தில் ஓரிரு சாவு நிகழும் …
உழவுயந்திரம் சாவூர்தியாய் மாறும் …
நாட்கள் செல்லச் செல்ல
ஆறு …ஏழு …சாவுகள் நிகழும்
அது முப்பது …நாற்பது வரை நீளும் …
இரத்தம் படிந்த ஊன மணம் வீசும்
உழவு யந்திரம் சாவூர்தியாய் நகரும் …

கடற்கரை மணலே நம்மவர்களின்
மாயனமாக மாறும் … அங்கு
வரிசைப்படுத்திய வெற்றுடல்கள்
நம்மவர்களின் இறுதி மரியாதையுடன்
மணல்களால் மூடப்படும் …
ஓரிரு நாட்கள் செல்ல
புதைக்கப்பட்ட சடலங்களின் கை ..கால்களின் விரல்கள்
தோன்றிய காட்சிகளும் நிகழும் …

இவையாவும் எதிரியின் குண்டுப்பொழிவு
மத்திய கதியில் பாயும் போது நிகழ்ந்த வலிகள் …
திடீர்ரென அதிதீவிர தாக்குதல்கள் வானைப்பிளக்கும் …
மக்கள் நெருப்புப் பொறிக்குள் சிக்கித்தவித்து
சின்னாபின்னமாக ஓடுவார்கள் …

அந்த நேரத்தில் நிகழந்ததுதான்
இந்தக் கொடிய காட்சி …
நிரை நிரையாக வரிசைகட்ட
அனாதைப் பிணங்களாக தமிழர்கள் …

இந்தக் கொடிய காட்சியைப் பார்த்த படியே
அடுத்த கணப்பொழுது நிகழப்போவது புரியாமல்
சுற்றிவளைத்த தீப்பொறி காட்டும் வழிநோக்கி
எதிரியின் பொறிவலைக்குள் சிக்கினார்கள் தமிழர் …

சிக்கியவர்களில் பலபேர்
பிணவரிசையில் அங்கம் வகித்தார்கள் …
பலர் இன்னும் காணாமல் போனோர்
பட்டியலின் பெயர்களில் பதிவாகியுள்ளார்கள் …

இது இந்த துயரங்களை
நேரில் அனுபவித்தவரின்
விழிதந்த பதிவு .
அகரப்பாவலன்.