வரலாற்றுப் பயணங்கள்!-வன்னியூர் குருஸ்-

371 0

வரலாற்றுப் பயணங்கள்!
***** *****
இன்று நடக்கின்றோம் இது நாளை முடியுமா
என்று தெரியாமல் இவர்களின் பயணம்…!
இன்று சுமக்கின்றோம் இது நாளை தொலையுமா
என்று அறியாத இவர்களின் தருணம்….!

தங்கையின் தலையில் ஏதோ…
தம்பியின் தலையில் ஏதோ…
மிச்சம் அத்தனையையும்
மிதிவண்டியில் சுமந்தவனாய் அண்ணன்..!

இவர்கள் சும்ப்பது வெறும் பொருட்களையல்ல…!
பேரிழப்பின் பின் இறக்கி வைக்கவே முடியாத
வருங்கால வாழ்வின்
வரலாற்றுப் பயண
வலிகளே என்பதை
இவர்களே அறியாமல் சுமக்கிறார்கள்.

-வன்னியூர் குருஸ்-

சுமைகள் எத்தனை!
**** ****
இழுவை வண்டியில் அள்ளிக் குவித்து
எங்கே போவதென்று இதுவரை அறியாது….
தின்ன உணவற்ற தெருவழிப் பயணத்தில்
இங்கே பாருங்கள் ஈழத்தின் தமிழரை..!

தங்க மாளிகைச் சொத்துக்களா இவை…!
சங்க காலத்துச் சேர்க்கைகளா இவை…!
வைரத்தாலான வீடுகளா இவை…!
வெள்ளியால் வார்த்த தூண்களா இவை…!

இல்லவே இல்லை,

இடர்வரும் போதெல்லாம் இடம்பெயர் தேவைக்காய்…
தங்கித் தங்கி யாத்திரை போவதற்காய்…
தட்டுக்கள் நகரங்கள் முட்டுக்கள் முகடுகள்
என்றிங்கே சுமப்பது இயல்பாச்சுத் தமிழர்க்கு…!

முள்ளிவாய்க்கால் முற்றத்தில் இவை முடிவாகப் போவதை
அறிந்தும் அறியாமல் இவர்களும் சுவடுகளை
நம்பியே சுமக்கின்றார்கள்.

-வன்னியூர் குருஸ்-

பெருவாழ்வு தொலைந்தபோது!
********
பொருள் கொஞ்சம் உடையோராய் இருந்தாலும்
பெருஞ் செல்வப் பெருக்கோடு வாழ்ந்தாலும்
போருள்ளும் பணியாது தலை குனியாது
பெருவாழ்வு வாழ்ந்த பெருமைக்குரியவர்கள் இவர்கள்…..!

வெட்கி ஒருவனும்.. வெயிலுக்கு ஒருவனும்
தொக்கி ஒருவனும், தோழ்ச்சுமையில் ஒருவனும்
தம்நிலை தாங்காது தலைகுனிந்து போவதோ
இந்நிலை வந்ததை விரும்பாத விறுமர்களோ..!

உருவங் கலைந்து உயிர் மட்டும் நகர்ந்து
தெருவும் மறந்து திசையெட்டுங் கரைந்து
வருமிக் காலமென எவரும் உணராது…
பெருத்த வலியோடு போவது தமிழனோ?

-வன்னியூர் குருஸ்-