பல்கலைக்கழக படிப்பிற்காக தானே நிதியை திரட்டும் சாதனை மாணவி

403 0

பல்கலைக்கழக படிப்பிற்காக தானே நிதியை திரட்டும் சாதனை மாணவி மகேஸ்வரன் கயலினி. கிளிநொச்சி மத்திய மகாவித்தியாலயத்தில் கல்வி பயின்ற இம்மாணவி உயிரியல் தொழில்நுட்ப பிரிவில் 2020ம் ஆண்டு உயர்தர பரீட்சையில் தோற்றி மாவட்ட ரீதியில் முதல் இடத்தினை பெற்றுக்கொண்டார்.

தமது குடும்ப வருமானத்தினை கருததில்கொண்டு பரீட்சையின் பின்னர் தனக்கு பல்கலைக்கழகம் கிடைக்கும் என்ற தன்னம்பிக்கையுடன் கிளிநொச்சியில் அமைந்துள்ள தனியார் ஆடைத்தொழிற்சாலையில் வேலைக்காக சேர்ந்தார்.

பரீட்சை பெறுபேறுகளில் மாவட்டத்தில் உயிரியல் தொழில்நுட்ப பிரிவில் முதல் நிலை பெற்றுள்ள நிலையிலும், இன்றைய தினமும் அவர் ஆடைத்தொழிற்சாலைக்கு சென்றிருந்தமை பலராலும் பாராட்டப்பட்டது.

தந்தையின் தனி வருமானத்தில் உயர்கல்விவரை தொடர்ந்த கயலினி, பல்கலைக்கழக கல்விக்காக தன்னை தயார்படுத்திக்கொண்டார். இந்த நிலையில் சிறந்த பெறுபேறு பெற்றுள்ள போதிலும் பல்கலைக்கழக கல்விக்காக பொருளாதார ரீதியிலும் தன்னை தயார்படுத்திக்கொள்வதானது பலராலும் பாராட்டப்பட்டே வருகின்றது.

தனது தந்தைக்கு தொடர்ந்தும் பொருளாதார நெருக்கடியை கொடுக்க கூடாது என்பதற்காக தான் வேலைக்கு சென்று பணத்தினை தேடி வருவதாக தெரிவிக்கும் இம்மாணவி, எதிர்காலத்தில் கணணி தொழில்நுட்பம் சார்ந்து தொழில்வாய்ப்பினை பெற்றுக்கொள்ளும் வகையில் பல்கலைக்கழக கல்வியை தொடர உள்ளதாக அவர் தெரிவிக்கின்றார்.

கல்விக்கு வறுமை ஒரு தடையல்ல எனவும், தனித்திரு, விழித்திரு, பசித்திரு என்ற வாக்கிற்கமைவாக கொண்ட இலட்சியத்தில் தளராது பயணித்தாலே வெற்றி இலக்கை அடைந்திட முடியும் என அந்த மாணவி தெரிவிக்கின்றார்.

தாம் பரீட்சை எழுதிய காலப்பகுதியில் கொவிட் காரணமாக பாடசாலை நீண்ட விடுமுறை, திகதி பிற்புாடல் என உள்ளிட்ட பல சவால்கள் காணப்பட்டன. ஆனாலும் எனது தந்தையின் உழைப்பிற்காக அர்பணித்து கல்வியை தொடர்ந்தேன். இந்த வெற்றி எனது தந்தைக்கானதேயாகும்.

இவ்வாறான வெற்றியை பெற்றுக்கொள்வதற்கு எனக்கு தட்டிக்கொடுத்த பெற்றோர், அதிபர், ஆசிரியர்கள் உள்ளிட்ட அனைவரும்கும் நன்றி எனவும் அம்மாணவி தெரிவிக்கின்றார்.

கிளிநொச்சி மாவட்டம் வறுமை தரப்படுத்தலில் முதல் நிலையில் காணப்படுகின்ற போதிலும், அவ்வாறான வறுமை நிலையிலிருந்த பல மாணவ மாணவியர்களே இவ்வருட உயர்தர பரீடசையில் முன்னிலையில் உள்ளமையும் இங்கு குறிப்பிடத்தக்கதாகும்.

குறித்த மாணவியின் பல்கலைக்கழக கல்விக்கு கரம் கொடுக்க முன்வர வேண்டும் என்பதே பலரது எதிர்பார்ப்புமாகும்