ரஷ்ய ஸ்புட்னிக் – வி தடுப்பூசிகள் இலங்கைக்கு

32 0

இலங்கையின் கொரோனா தொற்றுக்கு எதிரான போராட்டத்துக்கு உதவும் நோக்கில் ரஷ்யாவில் தயாரிக்கப்பட்ட 15,000 ஸ்புட்னிக்-வி தடுப்பூசி டோஸ்கள் இன்று அதிகாலை நாட்டை வந்தடைந்துள்ளன என விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கட்டார் ஏயர்வேஸுக்கு சொந்தமான கியூ. ஆர் -1668 என்ற சரக்கு விமானத்தில் இவை இன்று அதிகாலை 1.15 மணிக்கு கட்டுநாயக்கா சர்வதேச விமான நிலையத்துக்கு கொண்டுவரப்பட்டன.

இந்தத் தடுப்பூசி தொகையை மருந்து உற்பத்திகள், வழங்குகைகள் மற்றும் ஒழுங்குறுத்துகை இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமண விமான நிலையத்தில் வைத்து பொறுப்பேற்றார்.

தடுப்பூசிகளின் தொகை அரச மருந்துக் கழகத்தின் பல வாகனங்கள் சிறப்பு குளிர்பதன வசதிகளுடன் கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து அரச மருந்துக் கழகத்தின் சேமிப்பு வளாகத்திற்கு கொண்டு செல்லப்பட்டன.

ரஷ்யாவில் தயாரிக்கப்படும் ஸ்புட்னிக் வி தடுப்பூசிகளை இலங்கையில் அவசர பயன்பாட்டுக்காக உபயோகிப்பதற்கு தேசிய மருந்துகள் ஒழுங்குபடுத்தல் அதிகாரசபை அனுமதி வழங்கியுள்ளது.

மொத்தம் 13 மில்லியன் ஸ்புட்னிக் – வி தடுப்பூசி டோஸ்களை ரஷ்யாவிலிருந்து கொள்வனவு செய்ய இலங்கை முடிவு செய்துள்ளது.