காவிரி டெல்டா மாவட்டங்களில் 13 தொகுதிகளில் 3-ம் இடம் பிடித்த நாம் தமிழர் கட்சி

408 0

234 தொகுதிகளில் பெரும்பாலான இடங்களில் தி.மு.க., அ.தி.மு.க. ஆகிய 2 பெரிய கட்சிகளுக்கு அடுத்தப்படியாக நாம் தமிழர் கட்சி அதிக வாக்குகள் பெற்று 3-ம் இடத்தை பிடித்தது முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.

தமிழகத்தில் நேற்று சட்டசபை தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டன. இதில் தி.மு.க. தலைமையிலான கூட்டணி அமோக வெற்றி பெற்றது. தி.மு.க. தனி பெரும்பான்மை அளவில் வெற்றி பெற்று மு.க.ஸ்டாலின் முதல்வராக பதவியேற்க உள்ளார்.

இந்நிலையில் 234 தொகுதிகளில் பெரும்பாலான இடங்களில் தி.மு.க., அ.தி.மு.க. ஆகிய 2 பெரிய கட்சிகளுக்கு அடுத்தப்படியாக நாம் தமிழர் கட்சி அதிக வாக்குகள் பெற்று 3-ம் இடத்தை பிடித்தது முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.

இந்த தேர்தலில் தி.மு.க., அ.தி.மு.க. ஆகிய 2 பெரிய கட்சிகளுக்கு அடுத்த இடத்தை பிடிக்கும் கட்சி எது? என்று அனைத்து தரப்பு மக்களாலும் உற்று நோக்கி கவனிக்கப்பட்டது.

அதில் சீமானின் நாம் தமிழர் கட்சியானது பெரும்பாலான இடங்களில் அதாவது 90 சதவீத தொகுதிகளில் அ.ம.மு.க., மக்கள் நீதி மய்யத்தை பின்னுக்கு தள்ளி 3-ம் இடத்தை பிடித்து சாதனை படைத்தது. அந்த கட்சிக்கு கடந்த சட்டசபை தேர்தலை விட கூடுதல் வாக்கு சதவீதம் கிடைத்துள்ளது. அதாவது சுமார் 7 சதவீதத்தில் இருந்து 9 சதவீதம் வாக்குகள் கிடைத்துள்ளது.

இந்நிலையில் காவிரி டெல்டா மாவட்டங்களான தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை ஆகிய 4 மாவட்டங்களில் உள்ள 18 தொகுதிகளில் 13 இடங்களில் நாம் தமிழர் கட்சி 3-ம் இடத்தை பிடித்தது. இதில் அதிகபட்சமாக திருவாரூர் தொகுதியில் போட்டியிட்ட வினோதினி 26 ஆயிரத்து 211 வாக்குகள் பெற்றிருந்தார். மற்ற தொகுதிகளில் சராசரியாக 12 ஆயிரம் வாக்குகளை நாம் தமிழர் கட்சி வேட்பாளர்கள் பெற்றிருந்தனர்.

ஒட்டு மொத்தத்தில் கடந்த தேர்தலை காட்டிலும் இந்த முறை பெரும்பாலான தொகுதிகளில் நாம் தமிழர் கட்சி அதிக வாக்குகளை பெற்றிருந்தது அக்கட்சியின் வளர்ச்சியை காட்டுவதாக அரசியல் நோக்கர்கள் கூறுகின்றனர்.