இனவெறிக் குண்டுகள் விழுங்கிய பிஞ்சுகளும் கஞ்சிப் பாத்திரங்களும் !-அகரப்பாவலன்.

307 0

வானத்து இடி கூட
அதிர்ச்சியில் உறைந்த நேரம் …
வானையே பிளந்து
வெடித்துச் சிதறியது
இனவெறிக் குண்டுகள் …

கொடிய நெருக்கடியில்
நெருப்பாறு ஓடிய நேரம் …
பசித்தீயும் கடும் வீச்சோடு
பற்றியெரிந்த நேரம் …

வயிற்றுக்கு தெரியுமா
இனவெறியரின் வெறித்தனம் …
பட்டினி கிடந்து பழகிய வயிறும்
பற்றி எரிந்து அமிலத்தை
சுரந்த நேரம் …

முதியோர் முதல்
பிஞ்சுகள் வரை
வாழ்வா ? சாவா ?
என துடித்த நேரம் …
வந்தாரை வாழவைத்த
வன்னி மண்ணில்
வற்றிய வயிற்றுக்கு
ஒரு பருக்கை தேடிய நேரம் …

போரடித்து நெற்குவித்து
மலையென குவித்த
வன்னி மண்ணில்
கந்தகச் சாம்பலும்
கருகிய பிணங்களும்
பரவிக் கிடந்த நேரம் …

பசி …பட்டினி …
தலைவிரித்தாடிய நேரம் …
உயிர் வாழ ஒருபிடி சோறு …
அந்த வேளையில்
இருப்பதைக் கொண்டு
எழுந்த அமுதமே
” கஞ்சி ”
ஆம் …கஞ்சி காச்சி
முதியோர்க்கும் ,சிறியோர்க்கும்
முன்னுரிமையாய் கொடுக்கப்பட்டது …

அப்பொழுதான் …
அந்தக் கொடுமை நடந்தேறியது …
வரிசையில் முதியோரும் ,சிறியோரும்
பசித்தீ அணைக்கும்
கஞ்சியை நோக்கி நகர்ந்தனர் …
முழுச்சூழலையும் புரியாத சிறியோர்
மனமகிழ்வுடன் நகர்ந்தனர் …

பேரிடியுடன் குண்டுகள்
வன்னிமண்ணை பிளந்தன …
புன்னகை பூத்து நின்ற பிஞ்சு முகங்கள்
கணப்பொழுதில் சிதறித் துகளாயின …
அவர்கள் …
பசி,பட்டினி ,இன்பம் ,துன்பம்
இல்லா பெருநிலையை அடைந்தனர் …
சற்றுமுன் சிரித்த முகங்கள்
தாய்நிலத்தின் வேர்களில்
உர அணுக்களாய் ஆழ்ந்து விட்டன …

சிங்களம் சொல்கிறது …
இது போர் தர்மமாம் !
மண்ணில் ஆழ்ந்த குருதி அணுக்கள் சொல்கிறது …
” இது வீர விதைப்பின் சங்கமம் ”

அகரப்பாவலன்