வெள்ளைக் கொடி-அகரப்பாவலன்

361 0

வெள்ளைக் கொடி

” வெள்ளைக் கொடி ”
இறுதி நேர நியாயங்களின்
எதிர்பார்ப்பாய் பறந்தது …
இது மக்களைக் காக்கும்
பெருநோக்கோடு
எழுந்த கொடி …

மனிதத்தை கூறு போட்டு
இரத்தம் குடிப்பவர்களின் மனதில்
ஈரம் பிறப்பதோ …
நியாயம் பிறப்பதோ …
எதிர்பார்த்த ஒன்றல்ல …

இருப்பினும் …
இது உலகிற்கு கொடுத்த
கடைசி சந்தர்ப்பம் …
எத்தனை தொலைபேசித் தொடர்புகள் …
எத்தனை வாக்குறுதிகள் …
எத்தனை கபடவாதிகளின் பேச்சு …
எத்தனை நயவஞ்சனைகள் …

இவைகள் அனைத்தையும் தண்டி
வெள்ளைக் கொடிகள் நகர்ந்தன …
“வெள்ளைக் கொடி ”
சமாதானத்தின் குறியீடாம் …
இதை உருவகப்படுத்தியதே
இந்த போலி உலகம் தானே ! – பிறகு
வெள்ளைக் கொடி எப்படி மதிக்கப்படும் ?

கொலை வெறியர்கள்
என்று தெரிந்தும் …
இன வெறியர்கள்
என்று புரிந்தும் …
சாவின் பாதையில் செல்கிறோம்
என்று அறிந்தும் …
நகர்ந்தது “வெள்ளைக் கொடி ”

புலிவீரர்கள்
மண்ணைக் காக்க …
மக்களைக் காக்க …
உயிர்க் கொடை தருவர்
என்பது சரிதம் …

அன்றும் அதுதான் நடந்தது …
மக்களைக் காக்கும்
உயரிய நோக்கோடு
வெள்ளைக் கொடியுடன்
வந்தோர்கள் மீது
நச்சுக் குண்டுகள் பாய்ந்தது …
ரசாயனக் குண்டுகள் சிதறியது …
சாவின் உச்சக் கொடுமையின்
சன்னதங்கள் நடந்தேறியது …

நம் தளபதிகளும் ,வீரர்களும்
எரிந்து ,சிதைந்து ,சாம்பராகி
தேசக் காற்றில்
உயிரை விதைத்தனர் …

அன்று சீறிப் பாய்ந்த
இரத்தத் துளிகள்
“வெள்ளைக் கொடியில் ” எழுதியது
” இது இன அழிப்பின் உச்சம் ”
அகரப்பாவலன்