அரசியலமைப்பை மீறிய குற்றவாளிகளின் கூடாரமாக மாறிடுமோ நாடு……?

395 0

அரசியல் பழிவாங்கல்களுக்கு உள்ளாகியவர்கள் தொடர்பில் விசாரணை செய்வதற்காக நியமிக்கப்பட்ட ஜனாதிபதி ஆணைக்குழு நாடாளுமன்ற விவாதத்தில் கடுமையான விமர்சனங்களுக்கு உள்ளாகி இருக்கின்றது. இந்த விவாதங்களில் எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள், அந்த ஆணைக்குழுவையும், அதன் பரிந்துரைகளையும் நார் நாராகக் கிழித்துத் தள்ளி இருக்கின்றார்கள். அந்த ஆணைக்குழுவின் நியமனம் குறித்த சட்டவலுவும் கூட கடுமயான சட்டரீதியான விமர்சனங்களுக்கும், கண்டனங்களுக்கும் உள்ளாகி இருக்கின்றது.

ஜனாதிபதி கோத்தாபாய ராஜபக்சவினால் நியமிக்கப்பட்டுள்ள இந்த ஆணைக்குழு நாட்டில் நிலவுகின்ற ஜனநாயக ஆட்சிமுறையின் அதிகார வலுவேறாக்கல், நீதித்துறையின் சுதந்திரச் செயற்பாடு, சட்டமா அதிபரின் பக்கம் சாராத நடுநிலையான குற்றஞ்சாட்டும் அதிகாரம் என்பவற்றை மட்டுமல்லாமல், இடையூறின்றி சுதந்திரமாகவும், தனித்துவமாகவும் செயற்பட வேண்டிய பொதுச் சேவைத்துறையின் செயற்பாடுகளையும் கேள்விக்கு உள்ளாக்கி உள்ளதாக இந்த விமர்சனங்களில் அக்குவேறு ஆணிவேறாகச் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

சட்டவாக்கும் துறையாகிய நாடாளுமன்றம், நிறைவேற்றதிகாரம், நீதித்துறை என்பன தனித்துவமான உரிமைகளையும் சுதந்திரமாகச் செயற்படுகின்ற தன்மையைக் கொண்டிருக்கின்றன. இவற்றில் ஒன்று மற்றொன்றை மேவிச் செயற்பட முடியாது. ஒன்று மற்றொன்றின் மீது அதிகாரத்தைப் பிரயோகிக்க முடியாது. தனித்துவமாகத் தத்தமது துறைகளில் சுதந்திரமாகவும் பக்கசார்பின்றியும் வலுவாகவும் செயற்பட வேண்டும் என்பதே ஜனநாயகத்தின் வரையறை.

ஆனால் ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்டுள்ள இந்த ஆணைக்குழு ஜனநாயக விழுமியங்களுக்கு உட்பட்ட வலுவேறாக்கப்பட்ட அதிகார வலிமையைக் கொண்ட துறைகளை கேள்விக்கு உள்ளாக்கும் வகையிலான பரிந்துரைகளைச் செய்திருக்கின்றது. இது அப்பட்டமாக ஜனநாயக நடைமுறைகளை மீறுகின்ற அடாத்தான ஒரு நடவடிக்கை என்பது இந்த ஆணைக்குழு பற்றிய நாடாளுமன்ற விவாதத்தில் ஐயந்திரிபற எடுத்துரைக்கப்பட்டிருக்கின்றது.

தென்னாசியப் பிராந்தியத்தில் ஜனநாயகப் பாரம்பரிய ஆட்சிமுறையைக் கொண்ட நாடாக குறித்துக் காட்டப்படுகின்ற இலங்கையின் ஆட்சி முறையை பழிச்சொல்லுக்கு உள்ளாக்கும் வகையில் செயற்பட்டுள்ள இந்த ஆணைக்குழுவின் பரிந்துரைகளுக்கு பிரதமர் மகிந்த ராஜபக்ச நாடாளுமன்ற அங்கீகாரம் கோரி அதற்கான முன் மொழிவை சமர்ப்பித்துள்ளார். அந்த சமர்ப்பணத்தையடுத்தே நாடாளுமன்றத்தில் இந்த ஆணைக் குழு பற்றிய விவாதங்கள் இடம் பெற்றிருக்கின்றன.

ஜனநாயக ஆட்சி முறையின் முக்கிய தூண்களாகிய சட்டவாக்கத்துறை, நிறைவேற்று நிர்வாகத்துறை, நீதித்துறை என்பன ஒன்றையொன்று மேவிச் செயற்பட முடியாத பண்பியல்புகளைக் கொண்டிருக்கின்றன. அதிகார வலுவேறாக்கல் எல்லைப் பரப்பைக் கொண்டிருக்கின்றன.

இந்த நிலையில் நிறைவேற்றதிகார அதிகாரத்தைக் கொண்ட ஜனாதிபதி என்ற தனி மனிதரால் தன்னிச்சையாக ஒரு சட்ட விதியை ஆதாரமாகக் கொண்டு நியமிக்கப்பட்டுள்ள சாதாரண ஆணைக்குழு ஒன்று எவ்வாறு ஜனநாயகத் தூண்களின் செயற்பாடுகளில் தலையீடு செய்ய முடியாது. அவ்வாறிருக்கையில் இந்த ஆணைக்குழு எவ்வாறு அந்தத் தன்மைகளைக் கொண்ட பரிந்துரைகளைச் செய்ய முடியும்? – என்ற இந்தக் கேள்வி நாடாளுமன்ற விவாதத்தில் பங்கேற்றிருந்த எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களினால் பல்வேறு நிலைகளில் பல்வேறு சட்ட ஆதாரங்களுடன் முன் வைக்கப்பட்டிருக்கின்றது.

அது மட்டுமல்லாமல், முன்னாள் இராணுவத் தளபதியும், நாடாளுமன்ற உறுப்பினருமாகிய சரத் பொன்சேகா இந்த ஆணைக்குழுவை ‘பிஸ்ஸு பூஸா கமிஷன்’ விசர்ப்பூனை ஆணைக்குழு என்று வர்ணித்திருக்கின்றார். ஏனெனில் இந்த ஆணைக்குழு ஏற்கனவே நாட்டின் நீதி உட்பட்ட நீதிமன்ற விசாரணைகளில் நிலுவையாக உள்ள மிக மோசமான குற்றச் செயல்களுடன் சம்பந்தப்பட்ட வழக்கு விசாரணைகளை உடனடியாக நிறுத்த வேண்டும் என்று பரிந்துரை செய்திருக்கின்றது. அதன்படி சில வழக்குகளின் விசாரணைகள் முடிவுறுத்தப்பட்டு குற்றம் சாட்டப்பட்டவர்கள் விடுதலை செய்யப்பட்டிருக்கின்றார்கள்.

அதிகாரத்தில் உள்ள ஆட்சியாளர்களின் அப்பட்டமான தனிநபர்களின் தன்னல அரசியல் தேவைகளை நிறைவேற்றிக் கொள்வதற்கு உரிய சட்ட ரீதியான அங்கீகாரத்தைப் பெறுவதற்கான ஒரு முயற்சியாகவே இந்த ஆணைக்குழு நியமிக்கப்பட்டிருக்கின்றது என்பதை நாடாளுமன்ற விவாதத்தில் காரசாரமாகக் கருத்துரைத்துள்ள எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் வெளிச்சத்துக்குக் கொண்டு வந்துள்ளார்கள்.

ஏதேனும் பொறிமுறையொன்று நீதிமன்ற நிலுவையில் உள்ள வழக்குகள் தொடர்பில் முடிவுகளை மேற்கொள்வதற்கு நீதித்துறை சார்ந்த நிர்வாக அதிகாரத்தைக் கொண்டிருத்தல் வேண்டும். அந்த வகையில் அரசியலமைப்பின் 105 ஆவது பிரிவினால், ஜனாதிபதியின் இந்த ஆணைக்குழு நீதிப்பொறிமுறையின் நிர்வாக அதிகாரத்தைக் கொண்டதாக அடையாளம் காணப்படவில்லை என்று முன்னாள் வடமாகாண முதலமைச்சரும், நீதியரசருமாகிய யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சி.வி.விக்னேஸ்வரன் நாடாளுமன்றத்தில் எடுத்துரைத்துள்ளார்.

01-7.jpg

நீதித்துறை தொடர்பிலான விவகாரங்களில் தலையிடுவது என்பது சாதாரண விடயமல்ல. அவ்வாறு தலையிடுகின்ற ஒரு பொறிமுறையோ அல்லது அமைப்போ, ஆணைக்குழுவோ எதுவானாலும் அது நாட்டின் அதி உச்ச சட்டமாகிய அரசிய லமைப்பின் விதிகளுக்கமைய அங்கீகாரம் பெற்றிருக்க வேண்டும். அரசியலமைப்பின் 105 ஆவது பிரிவு அத்தகைய அங்கீகாரத்தை வழங்குகின்றது. ஆனால் அத்தகைய அங்கீகாரத்திற்கு அமைவாக இந்த ஆணைக்குழு நியமிக்கப்படவில்லை என்பதையே நாடாளுமன்ற உறுப்பினர் விக்னேஸ்வரன் சுட்டிக்காட்டி உள்ளார்.

அது மட்டுமன்றி, இந்த ஆணைக்குழுவினால் கையாளப்பட்டுள்ள நீதிமன்ற விசாரணைகளில் நிலுவையில் உள்ள அனைத்து வழக்குகளிலும் செய்யப்பட்டுள்ள தலையீடானது, நீதித்துறையில் அத்துமீறி மேற்கொள்ளப்பட்டுள்ள அப்பட்டமான அதிகார பிரவேசமாகவே கருதப்படுகின்றது. நீதித் துறையின் மீதான அப்பட்டமான இந்த அதிகாரத் தலையீடானது, அரசியலமைப்பின் 111சி பிரிவின்படி குற்றச் செயலாகும். அத்துடன் அரசியலமைப்பை மீறிய தண்டனைக்குரியகுற்றச் செயலாகும் என்பதையும் நாடாளுமன்ற உறுப்பினர் விக்னேஸ்வரன் நாடாளுமன்றத்தில் எடுத்துக் காட்டியுள்ளார். அது மட்டுமல்ல. இந்த ஆணைக்குழுவின் பரிந்துரைகளை எந்த வகையிலேனும் நாடாளுமன்றம் அங்கீகரிக்குமேயானால், அரசியலமைப்பின் 111சி பிரிவை – அரசியலமைப்பை நாடாளுமன்றம் மீறியதாக அமைந்துவிடும் என்றும் விக்னேஸ்வரன் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த வருடம் ஜனவரி மாத, 2157-44 என்ற இலக்கத்தைக் கொண்ட அரச வர்த்தமானியின் மூலம் இந்த ஆணைக்குழு நியமிக்கப்பட்டிருப்பதாக அறிவிக்கப்பட்டிருந்தது. அந்த அறிவித்தலின்படி ‘ஏற்கனவே எடுக்கப்பட்டுள்ள விடயங்கள் அல்லது இனிமேல் எடுக்கப்படக் கூடிய விடயங்களில் பாரபட்சமற்ற முறையில் இந்த ஆணைக்குழு நடந்து கொள்ள வேண்டும் என்ற ஆணை வழங்கப்பட்டிருக்கின்றது.

625.0.560.350.390.830.053.800.1600.160.9

ஒரு விடயம் பற்றி பாரபட்சமற்ற முறையில் நடந்து கொள்வது என்பது, ஏற்கனவே எடுக்கப்பட்டுள்ள ஒரு நடவடிக்கையில் மாற்றம் செய்யப்பட முடியாததாகும். அப்படியானால், இந்த ஆணைக்குழு தலையீடு செய்துள்ள பல விடயங்களில் ஏற்கனவே எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகளை எவ்வாறு மாற்றி அமைக்க முடியும்? என்ற கேள்வியையும் விக்னேஸ்வரன் நாடாளுமன்றத்தில் எழுப்பி உள்ளார்.

இதேபோன்று தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் மற்றும் பிரதான எதிர்க்கட்சியைச் சேர்ந்த வேறு சில நாடாளுமன்ற உறுப்பினர்களும் இந்த ஜனாதிபதி ஆணைக்குழுவின் செயற்பாடுகள் மற்றும் அதன் பரிந்துரைகள் அரசியலமைப்புக்கும் நாட்டின் சாதாரண ஜனநாயக சட்ட திட்டங்களுக்கும் விரோதமானவை என்பதைத் தமது விவாதங்களில் எடுத்துரைத்திருக்கின்றார்கள். அதன் மூலம் நாட்டின் சனநாயகத்திற்கு ஏற்பட்டுள்ள ஆபத்து குறித்து எச்சரிக்கை செய்திருக்கின்றனர்.

அரச பொதுச் சேவையில் ஈடுபட்டுள்ள அதிகாரிகள், அரச கூட்டுத்தாபன ஊழியர்கள், முப்படைகளைச் சேர்ந்த ஆளணியினர், மற்றும்பொது நிர்வாக சேவையில் உள்ளவர்கள் மீது மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கூறப்படுகின்ற அரசியல் பழிவாங்கல் சம்பவங்கள் தொடர்பிலான விடயங்களை விசாரணை செய்துதகவல்களைத் திரட்டுவதற்காக நியமிக்கப்பட்ட ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் நியமனமானது அரசியலமைப்புச் சட்ட ரீதியான வலுவற்றது என்பது நாடாளுமன்ற விவாதங்களிலும் அங்கு வெளியிடப்பட்டுள்ள கருத்துக்களிலும் வெளிப்படுத்தப் பட்டிருக்கின்றது.

அரசியலமைப்பின் மூன்றாம் நான்காம் அதிகாரங்களின்படி, அரச பொது நிறைவேற்று நிர்வாக நடவடிக்கையொன்றின் மூலம், ஒருவரது மொழியுரிமை அல்லது அடிப்படை உரிமை மீறப்பட்டிருக்கின்றது என்று கண்டறியப்பட்டால், அது பற்றிய விசாரணைகளை நடத்துவதற்கு உரிய நீதித்துறை சார்ந்த நியாயாதிக்கத்தை நாட்டின் உச்ச நீதிமன்றமே கொண்டிருக்கின்றது. அத்தகைய உரிமை மீறல் குறித்து செவிமடுப்பதற்குரிய நீதி நியாயாதிக்கமும் உச்ச நீதிமன்றத்தையே சார்ந்திருக்கின்றது என்று அரசியலமைப்பின் 126(1) ஆம் பிரிவு கூறுகின்றது.

இந்த சட்ட ஏற்பாட்டை மேற்கோள் காட்டியுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் விக்னேஸ்வரன் ஜனாதிபதியினால் அரசியல் பழிவாங்கல்களுக்கு உள்ளாக்கப்பட்டவர்கள் பற்றிய விசாரணைகளை மேற்கொள்வதற்காக நியமிக்கப்பட்டுள்ள ஜனாதிபதி ஆணைக்குழுவானது அடிப்படையில் சட்டவலுவற்றது என்பதைத் தெளிவாகச் சுட்டிக்காட்டியுள்ளார்.

434eb46b44a832fec870effd10c34dc3_XL-1.jp

இந்த நாடாளுமன்ற விவாதத்தின் பின்புலத்தில் ஜனாதிபதி கோத்தாபாய ராஜபக்ச அரசாங்கம் தனது அரசியல் செல்வாக்கைப் பயன்படுத்தி இந்த ஆணைக்குழுவின் பரிந்துரைகள் நாடாளுமன்றத்தினால் எந்த வகையிலேனும் அங்கீகரிக்கப்பட்டால், ஏற்கனவே குற்றமிழைத்தவர்கள் ஒரு போதும் தண்டிக்கப்படமாட்டார்கள்.

அது மட்டுமல்ல. அவ்வாறான குற்றச் செயல்களைச் செய்தவர்களுக்கு எதிராக சட்டரீதியான நடவடிக்கைகளை மேற்கொண்ட சட்டமா அதிபர் திணைக்களத்தைச் சேர்ந்தவர்கள், புலனாய்வு விசாரணைகளை நடத்தியவர்கள் என சட்ட முறைமைக்கமைய தமது அரச கடமைகளைச் செய்தவர்கள் அனைவரும் குற்றவாளிகளாக்கப்பட்டு தண்டிக்கப்படுவார்கள் என்பது சர்வநிச்சயம்.

அது மட்டுமல்லாமல் நாடு குற்றம் செய்பவர்கள் அல்லது குற்றவாளிகளின் ஒட்டுமொத்த கூடாரமாக மாற்றமடைந்துவிடும் என்பதில் சந்தேகமில்லை.

– பி.மாணிக்கவாசகம்