யாழில் புதுமனைப் புகுவிழாவில் உறவினர்களுக்கு இடையில் வாள்வெட்டு! மூவருக்கு நேர்ந்த நிலை

240 0

யாழ்ப்பாணம் தென்மராட்சியின் கெற்பெலி கிராமத்தில் நடைபெற்ற புதுமனைப் புகுவிழாவில் வழங்கப்பட்ட அன்பளிப்புப் பணத்தால் உறவினர்களுக்கு இடையில் வாள்வெட்டுச் சம்பவம் இடம்பெற்று மூவர் காயம் அடைந்துள்ளனர்.

இது குறித்து மேலும் தெரியவருவதாவது,

கெற்பெலி கிராமத்தில் நேற்று முன்தினம் புதிதாக கட்டப்பட்ட வீடு ஒன்றின் புதுமனைப் புகுவிழா நடைபெற்றிருக்கின்றது.

மறு நாள் வீட்டின் உரிமையாளர் அந்தக் கிராமத்தின் விற்பனை நிலையம் ஒன்றுக்குச் சென்றிருக்கின்றார். அங்கு அவர் வழங்கிய பணம் கள்ளப் பணம் என்று விற்பனை நிலைய உரிமையாளர் தெரிவித்திருக்கின்றார்.

இந்நிலையில் குறித்த பணத்தினை முதல் நாள் நடைபெற்ற புதுமனை புகுவிழாவிற்கு வந்திருந்த தன்னுடைய சகோதரியின் மகனே குறித்த பணத்தினை தனக்கு வழங்கியதாக புது வீட்டின் உரிமையாளர் தெரிவித்திருக்கின்றார்.

இதனை அடுத்து இரண்டு தரப்புக்கும் இடையில் மோதல் ஏற்பட்டிருக்கின்றது.

இந்நிலையில் கடந்த இரவு புதுமனைப் புகுவிழா நடைபெற்ற வீட்டிற்குச் சென்ற பணம் கொடுத்ததாக குற்றம்சாட்டப்பட்ட தரப்பினர் அங்கிருந்தவர்கள் மீது தாக்குதல் நடத்திவிட்டுத் சென்றுள்ளனர்.

இந்நிலையில் இன்று அதிகாலை தாக்குதல் நடத்தியவர்கள் வீட்டிற்குச் சென்ற புதுமனைப் புகுவிழா நடத்திய வீட்டினைச் சேர்ந்த தரப்பினர் வாள்வெட்டுத் தாக்குதல் நடத்தியிருக்கின்றனர்.

இதன் போது மூவர் காயம் அடைந்திருக்கின்றனர். காயமடைந்த மூவரும் இன்று காலை சாவகச்சேரி வைத்தியசாலைக்கு வெட்டுக் காயங்களுடன் சென்று சிகிச்சை பெற்றுள்ளனர்.

குறித்த சம்பவத்தின் தொடராக இன்று மாலையும் தாக்குதலுக்கு உள்ளான தரப்பு மீண்டும் தாக்குதலுக்கு முயன்றிருக்கின்றது.

சம்பவத்தினை அடுத்து இரண்டு தரப்பினரும் கொடிகாமம் பொலிஸ் நிலையம் சென்றிருக்கின்றனர் என்று செய்தியாளர் தெரிவிக்கின்றார்.

இவ்வாறான சம்பவங்கள் இடம்பெற்ற போதிலும் இதுவரையில் கள்ளப் பணம் தொடர்பில் பொலிஸ் நிலையத்தில் முறையிடப்படவில்லை என்று தெரியவந்துள்ளது.