கொழும்பு துறைமுக பொருளாதார நகரம் வல்லரசுகளுக்கிடையில் மோதல் தளமாக மாற்றமடையாது- அஜித் நிவாட் கப்ரால்

332 0

உத்தேச ஆணைக்குழு சட்டமூலத்திற்கு அமைய கொழும்பு துறைமுக பொருளாதார நகரத்தின் செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுவதே சிறந்ததென நிதி இராஜாங்க அமைச்சர் அஜித் நிவாட் கப்ரால் தெரிவித்துள்ளார்.

அவ்வாறு உத்தேச ஆணைக்குழு சட்டமூலத்திற்கு அமைய செயற்பாடுகள் முன்னெடுக்கப்படும்போது, வல்லரசுகளுக்கிடையில் மோதல் தளமாக குறித்த தளம் மாற்றமடையாதெனவும்  அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

கொழும்பு துறைமுக பொருளாதார நகரத்திற்கான உத்தேச ஆணைக்குழு சட்டமூலம் நடைமுறைக்கு வருகின்றப்போது சீன எதிர்ப்பு வல்லாதிக்க சக்திகள் ஒன்றாக இணைந்து எதிர்க்கும். இதில் இலங்கைக்கே அதிகளவு தாக்குதல் ஏற்படுவதற்கு வாய்ப்பு உள்ளதென நாடாளுமன்ற உறுப்பினர் விஜயதாஸ ராஜபக்ஷ தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் குறித்த கருத்துக்கு பதிலளிக்கும் வகையிலேயே இராஜாங்க அமைச்சர் அஜித் நிவாட் கப்ரால் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

மேலும் கொழும்பு துறைமுக பொருளாதார நகரத்தின் நிலம் இலங்கைக்கே உரித்துடையது. ஆகவே அதன் அதிகாரத்தினை ஆணைக்குழுவிடம் கையளிக்கவே தீர்மானித்துள்ளோம். இதனூடாக நில உரிமை பறிபோகாது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதேவேளை குறித்த துறைமுக நகரில் ஏனைய நாடுகளும் முதலீடுகளை மேற்கொள்ள முடியும் எனவும் இராஜாங்க அமைச்சர் அஜித் நிவாட் கப்ரால் தெரிவித்துள்ளார்.