ஜெயலலிதா நினைவிடத்தில் அனுமதி இல்லாமல் வைத்த சிலை அகற்றப்பட்டது

245 0

201612191309424368_merina-memorial-jayalalithaa-statue_secvpf-1ஜெயலலிதா நினைவிடத்தில் அனுமதி இல்லாமல் வைக்கப்பட்ட சிலை அகற்றப்பட்டது. சிலை வைக்க அரசிடம் முறைப்படி அனுமதி பெறவில்லை என்பதால் சிலையை பொதுப்பணித்துறையினரும், போலீசாரும் அப்புறப்படுத்தினர்.

மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் உடல் சென்னை மெரினா கடற்கரையில் உள்ள எம்.ஜி.ஆர். நினைவிட வளாகத்தில் அடக்கம் செய்யப்பட்டது.அங்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான அ.தி.மு.க. தொண்டர்கள், பொதுமக்கள் வந்து மலர் தூவி அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அமைச்சர்களும் அவ்வப்போது சென்று அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.இந்த நிலையில் நேற்று காலை ஜெயலலிதா நினைவிடத்துக்கு மீஞ்சூர் ஒன்றியம் நாலூர் ஊராட்சி செயலாளர் முத்துக்குமார் அஞ்சலி செலுத்த வந்திருந்தார். அப்போது அவர் பைபரில் தத்ரூபமாக செய்யப்பட்ட ஜெயலலிதாவின் மார்பளவு சிலையை நினைவிடத்தில் வைத்து கும்பிட்டார். நீலவண்ண சேலையில் ஜெயலலிதா சிரித்தபடி இருக்கும் 2 அடி உயரம் உள்ள இந்த சிலை ஆந்திராவில் வடிவமைக்கப்பட்டதாகும்.

ஜெயலலிதாவின் சிலையை அங்கு வந்திருந்த அனைவரும் வணங்கினார்கள்.புதிதாக ஜெயலலிதாவுக்கு சிலை வைக்கப்பட்ட தகவல் வேகமாக பரவியது. உடனே பொதுப் பணித்துறையினரும், போலீசாரும் அங்கு விரைந்து சென்று பார்வையிட்டனர்.

சிலை வைக்க அரசிடம் முறைப்படி அனுமதி பெறவில்லை என்பதால் சிலையை அங்கிருந்து அப்புறப்படுத்தி எடுத்துச் சென்றுவிட்டனர்.இந்த சம்பவத்தால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு எற்பட்டது.