வடக்கில் வீரியம் கூடிய வைரஸ் பரவல்- விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!

267 0

எதிர்வரும் மூன்று வாரங்கள் வடக்கில் கொரோனா தொற்று வீதம் அதிகரிக்கும் நிலை காணப்படுவதாக வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஆ. கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.

தற்போதுள்ள கொரோனா நிலைமைகள் தொடர்பில் மதத் தலைவர்களுக்கும் மாகாண சுகாதார பிரிவினருக்கும் இடையில் இடம்பெற்ற சந்திப்பின் போது மேற்கண்டவாறு தெரிவித்தார்.

வடக்கு மாகாணத்தில் அண்மைய நாட்களில் கொரோனா தொற்று அதிகரித்த நிலைமை காணப்படுகின்றது. அதிகரித்த கொரோனா தொற்றின் காரணமாக சில பகுதிகளை முடக்க வேண்டி ஏற்பட்டது.  எனினும் கடந்த வாரத்தில் யாழ் மாவட்டத்தில் 5 உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. யாழ்ப்பாண மாவட்டத்தில் மட்டும் 5 இறப்புகள் பதிவாகியுள்ளன.

உண்மையிலே கடந்த வருடத்தில் வடக்கு மாகாணத்தில் கொரோனா தாக்கத்தினால் இறப்புகள் பெரிதாக இடம்பெறவில்லை கடந்த ஒரு வாரத்தில் மட்டும் யாழ்ப்பாண மாவட்டத்தில் 5 உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன.  இதைவிட இலங்கையில் தற்போது புது வருட கொண்டாட்டங்களின் பிறகு கொரோனா தொற்று பரம்பல் மிகத் தீவிரம் அடையலாம் என்ற அச்சம் காணப்படுகின்றது.

முக்கியமாக சுகாதார அமைச்சு அது சம்பந்தமாக அச்சத்தை வெளியிட்டிருக்கின்றது. அதன் தாக்கத்தை இந்த மாத கடைசி வாரத்திலும் மே மாத முதல் இரண்டு வாரங்களிலும் அதன் தாக்கத்தை உணரக்கூடியதாக இருக்கும்.    புத்தாண்டு காலப்பகுதியிலே பொதுமக்கள் வெளி மாவட்டங்களுக்கான பயணங்கள் மேற்கொண்டமை பொது போக்குவரத்துகளை பயன்படுத்தியமை மற்றும் வணக்கத் தலங்களில் ஒன்று கூடியமை இதன் காரணமாக தொற்று பரவல் அதிகரிப்பு ஏற்படலாம் என எதிர்வு கூறப்பட்டுள்ளது.

இன்னொருபுறம் ஒரு புதிய வைரஸ் கூடிய வீரியம் கொண்ட வைரஸ் ஒன்று இங்கே பரவலாம் என தற்பொழுது அது சம்பந்தமான ஆய்வுகள் நடைபெற்று கொண்டிருக்கின்றன.   அடுத்த சில நாட்களில் அந்த முடிவுகள் தெரியவரும் எனவே அது ஒரு வீரியம் கூடிய ஒரு வகை வைரஸ் ஆகும் அந்த வைரஸ் மிகவும் ஒரு வீரியம் கூடிய வைரஸாக பரவலாம் என எதிர்வு கூறப்பட்டுள்ளது.    எனவே இந்த சூழ்நிலையிலே உலகத்திலும் ஏனைய நாடுகளிலும் கடந்த சில வாரங்களில் இந்த பரம்பல் மிகத் தீவிரம் அடைந்து வருகிறது.

குறிப்பாக இந்தியாவில் மிகத் தீவிரமாக பரவுகின்றது. குறிப்பாக நேற்று கூட 3 லட்சத்துக்கும் மேற்பட்டோர் தொற்றுக்குள்ளாகியிருக்கிறார்கள். அத்தோடு இரண்டாயிரத்துக்கு மேற்பட்ட இறப்புக்கள் பதிவாகியுள்ளன. எனவே இவ்வாறான சூழ்நிலையில் வட மாகாணத்திலும் இந்தப் பரம்பலைக்கட்டுப்படுத்துவதற்கு பல நடவடிக்கைகளை முன்னெடுத்திருக்கின்றோம்.   அதன் ஒரு அங்கமாக பொதுமக்கள் மத்தியில் இது பற்றிய சரியான விழிப்புணர்வு இல்லாத ஒரு நிலைமை காணப்படுகின்றது.

அதன் காரணமாக முக கவசம் அணிதல் மற்றும் சமூக இடைவெளி பேணுதல் பொது இடங்களில் ஒன்று கூடுதல் போன்ற விடயங்களில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு இன்மையே இதற்குக் காரணமாகும் எனவே பொதுமக்கள் சுகாதார நடைமுறைகளை சரியாக கடைப்பிடிக்க வேண்டும் பொதுமக்கள் தொற்று பரம்பல் அதிகரிக்கும் போது ஒரு சில நாட்களுக்கு சுகாதார நடைமுறைகளை கடைப்பிடிக்கிறார்கள். ஆனால் தொடர்ச்சியாக அதை பின்பற்றுவதில்லை.

எனினும் வடமாகாணத்தைப் பொறுத்தவரை பொதுமக்கள் மத்தியில் இந்த கொரோனா பற்றிய சரியான விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டிய தேவை உள்ளது.   அதனடிப்படையிலேயே இன்றைய தினம் மதத்தலைவர்கள் சமூகத்தில் மதிக்கப்படுபவர்கள் எனவே மதத் தலைவர்களின் வார்த்தைகளுக்கு மக்கள் கட்டுப்படுவார்கள்.  மக்கள் தங்களுடைய கருத்துக்களை ஏற்றுக் கொள்வதன் காரணம் மதத்தலைவர்கள் மூலமாக இந்த கருத்துக்கள் மக்களுக்கு செல்ல வேண்டும் என்பதற்காகவே இன்றைய தினம் இந்த கலந்துரையாடலை ஏற்பாடு செய்திருந்தோம் என்றார்.  குறித்த சந்திப்பில் இந்து கிறிஸ்தவ இஸ்லாம் மத தலைவர்கள் கலந்துகொண்டு தமது கருத்துக்களை பணிப்பாளரிடம் தெரிவித்திருந்தனர்.