வாக்கு எண்ணிக்கை மையம் அருகே நின்ற கன்டெய்னர் லாரியை சோதனை செய்யக்கோரி அரசியல் கட்சியினர் போராட்டம்

200 0

விருத்தாசலம் வாக்கு எண்ணிக்கை மையம் அருகே நின்ற கன்டெய்னர் லாரியை சோதனை செய்யக்கோரி அரசியல் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கடலூர் மாவட்டம் திட்டக்குடி மற்றும் விருத்தாசலம் சட்டமன்ற தொகுதியில் கடந்த 6-ந் தேதி தேர்தல் நடந்தது. இதில் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் வாக்குகள் பதிவானது. பின்னர் வாக்குப்பதிவு எந்திரங்கள் அனைத்தும் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் விருத்தாசலம் கொளஞ்சியப்பர் அரசு கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள வாக்கு எண்ணும் மையத்தில் வைக்கப்பட்டு, அந்த அறைகளுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளன.
அதுமட்டுமின்றி 24 மணி நேரமும் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டுள்ளது. இங்கு வருகிற 2-ந் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது.
இந்த நிலையில் நேற்று முன்தினம் கன்டெய்னர் லாரி ஒன்று, விருத்தாசலம் ஜங்சன் சாலையில் உள்ள வாக்கு எண்ணும் மையத்தின் அருகில் வந்து நின்றது. இதில் சந்தேகமடைந்த தி.மு.க., காங்கிரஸ், தே.மு.தி.க. கட்சியினர் அங்கு ஒன்று திரண்டனர்.
இது பற்றி தகவல் அறிந்ததும் விருத்தாசலம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து கன்டெய்னர் லாரி டிரைவரிடம் விசாரணை நடத்தினர். பின்னர் டிரைவரை போலீசார் எச்சரித்து அங்கிருந்து கன்டெய்னர் லாரியை எடுத்துச்செல்லுமாறு கூறினர். அதனை தொடர்ந்து டிரைவர் கன்டெய்னர் லாரியை அங்கிருந்து எடுத்துச்சென்று புதுக்குப்பம் வயலூர் மேம்பாலம் அருகே நிறுத்தி இருந்தார். இந்த நிலையில் நேற்று காலையில் விருத்தாசலம் சட்டமன்ற தொகுதி காங்கிரஸ் கட்சி வேட்பாளர் ராதாகிருஷ்ணன், திட்டக்குடி சட்டமன்ற தொகுதி தி.மு.க. வேட்பாளர் கணேசன் மற்றும் தி.மு.க., காங்கிரஸ் மற்றும் தே.மு.தி.க. நிர்வாகிகள், தொண்டர்கள் புதுக்குப்பம் வயலூர் மேம்பாலம் அருகே ஒன்று திரண்டனர். பின்னர் அவர்கள் அங்கு நின்றிருந்த கன்டெய்னர் லாரியை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது அவர்கள், வாக்கு எண்ணும் மையம் அருகே கன்டெய்னர் லாரி நின்றதன் மூலம் பல்வேறு சந்தேகங்கள் எழுகின்றன. எனவே இதை தவிர்க்க கன்டெய்னர் லாரியை திறந்து சோதனை செய்ய வேண்டும் என கூறி கோஷங்களை எழுப்பினர்.
இது குறித்த தகவலின் பேரில் விருத்தாசலம் சப்-கலெக்டர் பிரவீன்குமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். இதையடுத்து கன்டெய்னர் லாரி டிரைவருடன் சப்-கலெக்டர் பிரவீன்குமார் விசாரணை நடத்தினார். அப்போது அவர், வெளிநாட்டிற்கு அனுப்புவதற்காக திருப்பூரில் இருந்து தேங்காய்நார் ஏற்றி சீல் வைத்து சென்னைக்கு கொண்டு செல்வதாக தெரிவித்தார்.
இது குறித்த தகவலை போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் சப்-கலெக்டர் பிரவீன்குமார் தெரிவித்தார். இருப்பினும் அவர்கள் கன்டெய்னர் லாரியை திறந்து சோதனை செய்ய வேண்டும் என வலியுறுத்தினர். இதையடுத்து சப்-கலெக்டர் பிரவீன்குமார்,
இது குறித்து சுங்கத்துறை அதிகாரிகளிடம் தெரிவித்து கன்டெய்னர் லாரியை சோதனை செய்வதாக உறுதியளித்தார். அதன்படி சுங்கத்துறை அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு வந்தனர். பின்னர் அவர்கள், சப்-கலெக்டர் பிரவீன்குமார், துணை போலீஸ் சூப்பிரண்டு மோகன், வேட்பாளர்கள் கணேசன், ராதாகிருஷ்ணன் மற்றும் அரசியல் கட்சியினர் முன்னிலையில் கன்டெய்னர் லாரியை திறந்து சோதனை செய்தனர். அப்போது அதில் தேங்காய் நார் இருந்தது தெரிந்தது. இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட அரசியல் கட்சியினர் அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.