தெல்லிப்பழை யூனியன் கல்லூரிக்குள் அத்துமீறி நுழைந்து மாணவர்கள் மீது கொடூரத் தாக்குதல்

284 0

தெல்லிப்பழை யூனியன் கல்லூரியினுள் அடாத்தாக புகுந்த அமெரிக்கன் மிசனை சேர்ந்தவர்கள் மாணவர்கள் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர். இதில் காயமடைந்த சில மாணவர்கள் தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

இச்சம்பவம் இன்று காலையில் இடம்பெற்றுள்ளது. சம்பவம் தொடர்பில் தெரியவருகையில்,

மாணவர்கள் துவிச்சக்கரவண்டிகளை நிறுத்தும் இடம் தமக்கு சொந்தமானது எனவும் அதில் துவிச்சக்கர வண்டிகளை நிறுத்தவேண்டாம் எனக்கூறியுமே மாணவர்கள் தாக்கப்பட்டனர்.

கடந்த சில மாதங்களாக இந்தக் காணிப் பிரச்சினை நடைபெற்று, தற்போது அந்த நிலம் கல்லூரிக்கு சொந்தமானது என மாகாண கல்வித் திணைக்களத்தினால் மூன்று வருடங்களுக்கு முன்னர் உறுதிப்படுத்தப்பட்டு பாடசாலையிடம் கையளிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், இன்று காலை பாடசாலை ஆரம்பிப்பதற்கு முன்னர் கொழும்பிலிருந்து வருகை தந்திருந்த சென்ற அமெரிக்கன் மிசனை சேர்ந்தவர்களும் இங்குள்ளவர்களுடன் இணைந்து மாணவர்கள் வாகனங்களை நிறுத்தும் இடத்திற்கு செல்ல முடியாதவாறு தடிகள், சீற்றுகளை போட்டு பாதையை மறித்திருந்தனர்.

எனினும், அங்கு ஆசிரியர்கள் வருகை தந்த பின்னர் மாணவர்கள் வாகனங்களை உள்ளே நிறுத்தியபோது அவர்கள் மீது கொடூரமான முறையில் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதில் ஐந்து வரையான மாணவர்கள் காயமடைந்து தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர்.

தெல்லிப்பழை பொலிஸார் சம்பவ இடத்தில் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்