நொத்தாரிசு ஆலோசனைக் குழு நீதியமைச்சிடம் முன்மொழியப்பட்ட திருத்தங்களைக் கையளித்துள்ளது

306 0

நீதியமைச்சு நியமித்த நொத்தாரிசு ஆலோசனை குழு தனது முன்மொழியப்பட்ட திருத்தங்களை கையளித்துள்ளது.

நீதியமைச்சு சமர்ப்பித்த அமைச்சரவை குறிப்பின் அடிப்படையில், சட்ட நடவடிக்கைகளை துரிதப்படுத்துவதற்காக திட்டத்தை முன்னெடுக்கும் அலகு ஒன்றினை ஸ்தாபிப்பதற்கான யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரமளித்துள்ளது.


இதனடிப்படையில் நீதியமைச்சு சிரேஷ்ட சட்டத்தரணி ஜி.ஜி. அருள்பிரகாசம் தலைமையில் நொத்தாரிசு ஆலோசனைக் குழுவொன்றை நியமித்தது.


இந்தக் குழுவில் நீதியமைச்சு, சட்டமாஅதிபர் திணைக்களம், பதிவாளர் ஆணையாளர் திணைக்களம், சட்டவரைஞர் திணைக்களம், இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் ஆகியவற்றை பிரதிநிதித்துவம் செய்யும் உறுப்பினர்களும், சிரேஷ்ட சட்டத்தரணிகளும் இடம்பெற்றுள்ளனர்.


அட்டோர்ணி தத்துவத்தை பதிவு செய்தல் கட்டளைச் சட்டம், நொத்தாரிசுகள் திருத்தச்சட்டம், ஆவணங்கள் பதிதல் சட்டம், வில்ஸ் சட்டம், 2017ஆம் ஆண்டின் ஐந்தாம் இலக்க கைமீட்கப்பட முடியாத நன்கொடை உறுதிகளை பாரதூரமான நன்றியீனம் என்ற அடிப்படையில் கைமீட்டல் சட்டம் ஆகியவை குறித்து ஆராய்வதே இந்தக் குழுவின் நோக்கம்


இந்த நான்கு சட்டங்களும் 100 வருடங்களுக்கு முன்னர் பிரிட்டிஷ் ஆட்சியாளர்களின் காலத்தில் இயற்றப்பட்டவை.இவற்றில் சிலவற்றில் கடந்த 100 வருடகாலப் பகுதியில் எந்தத் திருத்தமும் மேற்கொள்ளப்படவில்லை


நொத்தாரிசுகள் முறைகேடுகளில் ஈடுபடுவதை தடுப்பதற்கும்,நீதிமன்ற வழக்கில் ஈடுபட்டிருப்பவரின் நலன்களைப் பாதுகாப்பதற்கும் சட்ட செயற்பாடுகளை துரிதப்படுத்துவதற்கும்,தேவையற்ற நீண்டகால நீதிமன்ற வழக்குகளை தவிர்ப்பதற்கும் நொத்தாரிசுகள் ஆலோசனைக் குழு நீதியமைச்சிடம் சமர்ப்பித்துள்ள யோசனைகள் குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்குகின்றன.