யாழ். மாநகர சபையின் காவல் படை மற்றும் சீருடை குறித்து விசாரணை- அஜித் ரோஹன

22 0

யாழ்ப்பாணம் மாநகர சபையால் அமைக்கப்பட்டுள்ள மாநகர காவல் படை மற்றும் அதன் சீருடை தொடர்பான விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.

அந்தவகையில், யாழ். மாநகர முதல்வர் மற்றும் ஆணையாளர் உள்ளிட்டோரிடம் வாக்குமூலங்களைப் பதிவு செய்வதற்கு யாழ்ப்பாணம் பொலிஸார் நடவடிக்கையை முன்னெடுத்துள்ளதாக அவர் கூறியுள்ளார்.

யாழ். மாநகரத்தை சுத்தமாகவும் அழகாகவும் வைத்திருக்கும் பொருட்டு, மாநகர சபையினால் மாநகர காவல் படை ஒன்று நேற்று தமது பணியை ஆரம்பித்தது. இதற்குப் பிரத்தியேகமாக சீருடை ஒன்றும் வழங்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், இந்தப் படை மற்றும் சீருடை குறித்து சர்ச்சையை ஏற்படுத்தும் வகையில் சில இணைய ஊடகங்கள், சமூக வலைத்தளங்களில் செய்திகள் பரவியிருந்தன.

எனினும், இதற்கு யாழ். மாநகர முதல்வர் வி.மணிவண்ணன் இன்று ஊடக சந்திப்பொன்றை நடத்தி விளக்கமளித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.