அரசியல்வாதியாக மாறுகிறார் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை- தயாசிறி

320 0

கொழும்பு பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை அரசியல் மயப்படுத்தப்பட்டு விட்டார் என்பதையே அவரின் பேச்சு காட்டுகிறது என இராஜாங்க அமைச்சர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.

கடந்த ஏப்ரல் 4ஆம் திகதி நடைபெற்ற  ஈஸ்டர்  தின நிகழ்வின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த கொழும்பு பேராயர்,  “ஜனாதிபதி ஆணைக்குழுவின் இறுதி அறிக்கையில் குற்றம் சாட்டப்பட்டுள்ள  முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மீது உடனடியாக சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ஒரு கட்சியை வழிநடத்தி தேர்தலில் வெற்றியடைவதற்கு சிறிசேனவுக்கு ஏதாவது கண்ணியம் இருக்கிறதா? என அவர் கேள்வி எழுப்பி இருந்தார்.

இந்நிலையில் இவ்விடயம் தொடர்பாக நேற்று (திங்கட்கிழமை) ஊடகங்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்கும்போதே தயாசிறி ஜயசேகர இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

குறித்த ஊடக சந்திப்பில் அவர் மேலும் கூறியுள்ளதாவது,  “ரஞ்சித் ஆண்டகை அரசியல் மயப்படுத்தப்பட்டு விட்டார் என்பதையே தற்போது அவரின் பேச்சு காட்டுகிறது.

இதேவேளை ஈஸ்டர் ஞாயிறு குண்டுவெடிப்பு தொடர்பாக, ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் இறுதி அறிக்கையில், எந்த  இடத்திலும் முன்னாள் ஜனாதிபதி மீது குற்றம் சுமத்தப்படவில்லை.

மேலும் சிறிசேன மீது குற்றச்சாட்டுகளை பதிவு செய்வதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து ஆராய சட்டமா அதிபருக்கு மட்டுமே பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

அத்துடன் ஸ்ரீ.ல.சு.க. ஒரு புதிய பயணத்தை மேற்கொள்ளத் தயாராகி வரும் நிலையில் இத்தகைய சவால்களையும் எதிர்கொள்ள வேண்டி ஏற்பட்டுள்ளது.

எனினும் அவைகளையும் வெற்றிக்கொள்ள நாங்கள் தயாராகவே இருக்கிறோம். இதேவேளை பேராயரின் கூற்றுக்குப் பின்னால்  எவரும் இருக்கின்றார்களா என்பது குறித்து எனக்கு எதுவும் தெரியாது” என அவர் குறிப்பிட்டுள்ளார்.