ஆனந்தபுரச் சமரில் வீீீரகாவியமான எட்டுத் தளபதிகள் உட்பட நூற்றுக் கணக்கான மாவீரர்களின் 12 ஆவது ஆண்டு நினைவு வணக்க நிகழ்வு..

403 0

ஆனந்தபுரச் சமரில் வீீீரகாவியமான எட்டுத் தளபதிகள் உட்பட நூற்றுக் கணக்கான மாவீரர்களின் 12 ஆவது ஆண்டு இன்று (04-04-2021) ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் பாரிசில் தமிழர் ஒருங்கிணைப்புக் குழு பணிமனையில் நினைவுகூரப்பட்டது.

பிரான்சில் கோவிட்19 இன் 3 ஆவது அலையின் தாக்கத்தால் ஏற்பட்டுள்ள சுகாதார நிலையை கருத்திற்கொண்டு மட்டுப்படுத்தப்பட்ட நிலையில் நினைவு கூரப்பட்டது.
பொதுச்சுடரை தமிழ்ச் சங்கங்களின் கூட்டமைப்பின் துணைப் பொறுப்பாளர் திரு. உருத்திரகுமாரன் அவர்கள் ஏற்றிவைத்தார்.

மாவீரர்களுக்கான பொதுப் படத்திற்கான ஈகைச் சுடரை 15.06.1995 இல் கொக்குவில் பகுதியில் ஏற்பட்ட எதிர்பாரத மோதலில் வீரச்சாவைத் தழுவிக்கொண்ட மேஜர் இன்பன் அவர்களின் சகோதரர் ஏற்றிவைத்தார்.

ஏனைய தளபதிகளின் உருவப் படங்களுக்கு 1988, 1990 களில் வீரகாவியமாகிய மாவீரர்கள் கப்டன் பரா, லெப்டினன் தக்கி ஆகியோரின் சகோதரனும், 2001 இல் வீரகாவியமாகிய மாவீரன் 2ஆம் லெப் ஆதவன் அவர்களின் சகோதரரும் ஏற்றி வைத்து மலர் வணக்கம் செலுத்தியதைத் தொடர்ந்து அகவணக்கம் செலுத்தப்பட்டு அனைவரும சுடர்ஏற்றி மலர் வணக்கம் செலுத்தினர்.

தொடர்ந்து நிர்வாகப் பொறுப்பாளர் பாலசுந்தரம் அவர்கள் கருத்து தெரிவிக்கையில் ஆனந்த புரச் சமரில் இந்த மறவர்கள் தலைமையை பாதுகாக்கவும், போராட்டத்தை தொடர வேண்டுமென்ற நோக்கில் தங்கள் உயிர்களை களத்தில் தியாகம் செய்தார்கள் என்றும், தற்போதும் எமது போராட்ட பணியில் நாமும் அதேபோல் செயலாற்ற வேண்டுமென்றும் , சர்வதேசத்தின் ஒத்துழைப்போடுதான் நச்சு ஆயுதங்கள் பாவிக்கப்பட்டு எமது போர் முடிவுக்குக் கொண்டு வரப்பட்டது என்றும் உலக ஒழுக்கில் நீதி நியாயம் என்பதைத் தாண்டி சுயதேவையின் அடிப்படையில் இயங்குகிறது என்பதைப் புரிதல் வேண்டுமென்று தெரிவித்தார்.

தொடர்ந்து தமிழ் இளையோர் அமைப்பின் பொறுப்பாளர் திரு நிந்துலன் அவர்கள் தனது கருத்தில் இவர்களின் அரப்;பனிப்பு தமிழரின் வீரத்தை உலகிற்கு சொல்லி நிற்கிறது. இப்படியான ஈகங்களை நாம் நினைவில் நிறுத்தி எமது போராட்டத்தை தொடரல் வேண்டுமென்றார்.

இறுதியில் நம்புங்கள் தமிழீழம் பாடல் ஒலிக்கவிட்டு ‘தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்” என்ற உறுதியுடன் நிறைவடைந்தது.