யேர்மனியில் வாழும் ஈழத்தமிழ் மக்களை சிறிலங்காவுக்குத் திருப்பி அனுப்புவதற்காக யேர்மனிய அரசாங்கம் ஒரு வாரமாக தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றது. இதனைத் தடுத்து நிறுத்துவதற்காக யேர்மனியில் வாழும் தமிழ்மக்களை ஒன்றுதிரட்டி பல இடங்களில் ஆர்ப்பாட்ட ஒன்று கூடல்களை நடாத்தி யேர்மனிய அரசிடம் நாடுகடத்தும் முடிவினைப் பரிசீலிக்கும்படி தமிழ் இளையோர் அமைப்பினரும் , ஈழத்தமிழ் மக்களவையினரும், தமிழ்ப் பெண்கள் அமைப்பினரும் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
அந்த வகையிலே நேற்றைய தினம் 28.3.2021 ஞாயிற்றுக்கிழமை யேர்மனியின் தென்மாநில நகரமாகிய போட்சையும் (Pforzheim) நகரத்தில் தடுத்துவைக்கப்பட்டிருக்கும் சிறைச்சாலைக்கு முன்பாகவும் சம நேரத்தில் மத்தியமாநில நகரமாகிய பியூரன் (Büren) நகரத்தில் அமைந்திருக்கும் சிறச்சாலைக்கு முன்பாகவும். இன்று 29.3.2021 திங்கட்கிழமை யேர்மனியின் தலைநகரில் உள்துறை அமைச்சிற்கு முன்பாகவும். அதே வேளையில் மத்திய மாநில பாராளுமன்றம் அமைந்திருக்கும் டுசில்டோர்ப் நகரத்திலும் தொடர்ச்சியாக ஆர்ப்பாட்ட ஒன்றுகூடல்களை நடாத்தி யேர்மனிய அரசின் நாடுகடத்தும் நடவடிக்கையினைத் தடுப்பதற்கு முயற்சி செய்தவண்ணம் உள்ளனர்.

தமிழ் இளையோர்களும் மக்களவை சார்ந்தவர்களும் யேர்மனிய அரசியற் கட்சிகளுடனும் மனித உரிமை அமைப்புக்களுடனும் சட்டவல்லுனர்களுடனும் தொடர்புகளைப் பேணி நாடுகடத்தலுக்கு எதிரான பணிகளில் ஈடுபட்டவண்ணம் உள்ளனர். அந்த வகையில் இன்று டுசில்டோர்ப் பாராளுமன்றத்திற்கு முன்பாக பல மனிதஉரிமை அமைப்புக்களும், யேர்மனிய கட்சிகளும், தமிழர்களுடன் ஒன்றுகூடி ஆறுதல் கூறி வழிமுறைகளையும் உரைத்துள்ளனர். தமிழ்மக்களின் ஆதங்கங்கள் அடங்கிய மனுவும் பாராளுமன்றில் சமர்ப்பிக்கப்பட்டது.





































































