ஜல்லிக்கட்டு விவகாரத்தில் நீதிமன்ற தீர்ப்புக்கு பின் முடிவு

548 0

daily_news_6235882043839ஜல்லிக்கட்டு விவகாரத்தில் நீதிமன்ற உத்தரவுக்கு ஏற்ப மத்திய அரசு முடிவு எடுக்கும் என்று மத்திய அமைச்சர்  அனில் மாதவ் தவே கூறினார். தமிழகத்தின் பாரம்பரிய போட்டியான ஜல்லிக்கட்டு, உச்ச நீதிமன்ற தடையுத்தரவால் நடத்தப்படவில்லை. இது தொடர்பான வழக்கு, உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. இந்த வழக்கில் சமீபத்தில் மத்திய அரசு வாதிடுகையில், ‘‘நம்முடைய பாரம்பரியத்தின் ஒரு அங்கமாக ஜல்லிக்கட்டு விளையாட்டு உள்ளது என்பதால், அதற்கு  அனுமதி அளிக்க வேண்டும்’’ என்று தெரிவித்திருந்தது. இந்த வழக்கில் தேதி குறிப்பிடாமல் தீர்ப்பை ஒத்தி  வைத்துள்ள நீதிபதிகள், வழக்கில் சம்பந்தப்பட்ட அனைத்து தரப்பினரும் எழுத்து வடிவில் தங்கள்  வாதங்களை 2 வாரங்களுக்குள் தாக்கல் செய்ய வேண்டும் என்றும் உத்தரவு  பிறப்பித்திருந்தது.

இந்நிலையில், ஜனவரி 2வது வாரத்துக்குள் இந்த வழக்கில்  தீர்ப்பு வெளியாகாவிட்டால், தமிழகத்தில் பொங்கலையொட்டி ஜல்லிக்கட்டு நடைபெறுவது  கேள்விக்குறியதாகி விடும். இது குறித்து நேற்று டெல்லியில் செய்தியாளர்களிடம் மத்திய அமைச்சர் அனில் மாதவ் தவே கூறியதாவது: தமிழகத்தில் பொங்கலுக்கு  ஜல்லிக்கட்டு நடத்துவது தொடர்பாக எந்த  முடிவையும் நாம் இப்போது எடுக்க முடியாது. உச்ச நீதிமன்றத்தின் இறுதி தீர்ப்புக்காக  காத்திருப்போம். அதற்கு பிறகு என்ன செய்யலாம் என்பது குறித்து முடிவு  எடுக்கலாம்.

ஒரு சமூகத்தின் பாரம்பரிய கலாசாரத்துக்கு மதிப்பு அளிக்கும் வகையில்  நாம் நடவடிக்கை எடுக்க வேண்டும். எந்த விதிமீறல்களும் இல்லை என்றால்,  விலங்குகள் கொடுமைக்கு ஆளாக்கப்படவில்லை என்றால் ஜல்லிக்கட்டுக்கு அனுமதி  அளிக்க வேண்டும் என்பதுதான் எனது கருத்து. இப்போது  இந்த விவகாரம் நீதிமன்றத்தில் உள்ளது. அதன் முடிவை நாம்  மதிக்க வேண்டும். எனவே, தீர்ப்பு வெளிவந்த பிறகு என்ன செய்வது என்பது  குறித்து மத்திய அரசு முடிவு எடுக்கும். இவ்வாறு அவர் கூறினார்.