வார்தா புயலினால் தொற்று நோய் பாதிப்பு இல்லை என்பதை உறுதிசெய்ய நடவடிக்கை

315 0

201612170822569844_wardha-storm-has-no-effect-on-infection-to-confirm-action_secvpfபுயல் பாதிக்கப்பட்ட பகுதியில் 100 சதவீதம் தொற்று நோய் பாதிப்பு இல்லை என்பதை உறுதிசெய்ய நடவடிக்கைகள் பலவற்றை தமிழக அரசு தீவிரமாக மேற்கொண்டு வருகிறது என்று அமைச்சர் விஜயபாஸ்கர் கூறினார்.

வார்தா புயலின் தாக்குதலினால் சென்னை, காஞ்சீபுரம், திருவள்ளூர் மாவட்டம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. இந்த புயலினால், இந்த மாவட்டங்களில் தொற்று நோய் பரவாமல் இருக்க தமிழக சுகாதாரத்துறை பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

இதற்காக நடமாடும் மருத்துவ குழுக்கள், 108 அவசரகால ஆம்புலன்ஸ் சேவை உள்ளிட்ட பணிகளை கொடி அசைத்து தமிழக முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் நேற்று தொடங்கிவைத்தார்.

அப்போது தொற்று நோய் பரவாமல் இருக்க எடுக்கப்படும் நடவடிக்கைகள், நடமாடும் மருத்துவ குழுக்கள் செல்லும் வாகனங்களில் உள்ள மருத்துகள், இந்த வாகனங்களில் செல்லும் டாக்டர்கள் எப்படி மருத்துவ சேவைகள் வழங்குவார்கள் என்பது குறித்து முதல்-அமைச்சர் பன்னீர்செல்வத்திடம், மக்கள் நல்வாழ்வுத்துறை முதன்மை செயலாளர் ஜெ.ராதாகிருஷ்ணன் விளக்கி கூறினார்.

சென்னை ஓமந்தூரார் அரசினர் தோட்ட வளாகத்தில் நடந்த இந்த நிகழ்ச்சியில், தமிழக வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சி.சீனிவாசன், பொதுப்பணி, நெடுஞ்சாலைகள் மற்றும் சிறுதுறைமுகங்கள் துறை அமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி, மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் பி.தங்கமணி, நகராட்சி நிர்வாகம், ஊரகவளர்ச்சி, சிறப்புதிட்டங்கள் செயலாக்கத்துறை அமைச்சர் எஸ்.பி. வேலுமணி, மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர், தலைமைச் செயலாளர் பா.ராமமோகன ராவ், தமிழ்நாடு அரசு ஆலோசகர் ஷீலாபாலகிருஷ்ணன், மக்கள் நல்வாழ்வுத்துறை முதன்மைச் செயலாளர் டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணன், இந்திய மருத்துவத்துறை ஆணையர் மோகன் பியாரே, மாநில நலவாழ்வு குழும திட்ட இயக்குனர் டாக்டர் டேரேஸ் அஹமது, பொது சுகாதாரத்துறை இயக்குனர் டாக்டர் குழந்தைசாமி, மருத்துவப்பணிகள் இயக்குநர் (பொறுப்பு) டாக்டர் செங்குட்டுவன், மருத்துவக்கல்வி இயக்குநர் (பொறுப்பு) டாக்டர் நாராயணபாபு உள்பட பலர் கலந்துகொண்டனர்.

சென்னை, காஞ்சீபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் தொற்று நோய் பரவாமல் இருக்க எடுக்கப்படும் நடவடிக்கை குறித்து நிருபர்களிடம் அமைச்சர் விஜயபாஸ்கர் கூறியதாவது:-
வார்தா புயல் காரணமாக மக்களுக்கு எந்த வித தொற்று நோயும் ஏற்படாமல் தடுக்க தமிழக அரசு போர்க்கால அடிப்படையில் உரிய தொடர் நடவடிக்கை எடுத்து வருகிறது.
பொதுமக்களை நோயிலிருந்து பாதுகாக்கும் வண்ணம் மருத்துவ முகாம்கள், நோய் வராமல் தடுக்க 161 நடமாடும் மருத்துவ குழுக்கள், 119 எண்ணிக்கையில் 108 ஆம்புலன்ஸ் சேவைகள், 50 உணவு பாதுகாப்பு குழுக்கள், பாதுகாக்கப்பட்ட குடிதண்ணீரை உறுதிசெய்ய 50 ‘குளோரினேசன்’ குழுக்கள் மற்றும் 51 கொசு ஒழிப்பு குழுக்கள் ஏற்படுத்தப்பட்டு செயல்பட்டுள்ளது. இந்த பணிகளை உள்ளாட்சி அமைப்புகளுடன் இணைந்து மருத்துவத்துறை செயல்படுத்தி வருகின்றன.

புயல் பாதிக்கப்பட்ட பகுதிகளில் நடத்தப்பட்ட மருத்துவ முகாம்களில் இதுவரை மொத்தம் 52,343 நபர்கள் பயன்பெற்றுள்ளனர். சென்னை பெருநகர மாநகராட்சியில் 80 நடமாடும் மருத்துவ குழுக்கள், காஞ்சீபுரம் மாவட்டத்தில் 39 நடமாடும் மருத்துவ குழுக்கள் மற்றும் திருவள்ளூர் மாவட்டத்தில் 42 நடமாடும் மருத்துவ குழுக்கள் என 161 நடமாடும் மருத்துவ குழுக்கள் நிவாரண பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.

108 அவசரகால ஆம்புலன்ஸ் சேவை வழங்க சென்னை பெருநகர மாநகர பகுதியில் 40, காஞ்சீபுரம் மாவட்டத்தில் 46 மற்றும் திருவள்ளூர் மாவட்டத்தில் 33 என மொத்தம் 119 அவசரகால ஆம்புலன்ஸ்கள் இப்பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.

பொதுமக்களுக்கு பாதுகாப்பான குடிநீர் வழங்குவதை உறுதி செய்யும் பொருட்டு குடிநீரில் ‘குளோரின்’ பரிசோதனை செய்ய 50 ‘குளோரினேஷன்’ குழுக்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இக்குழுவில் 1 மருத்துவ அலுவலர், 2 சுகாதார ஆய்வாளர்கள் மற்றும் 1 மருத்துவ பணியாளர் ஆகியோர் உள்ளனர்.

இக்குழுக்கள் புயல் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு சென்று ஆங்காங்கே உள்ள குடிநீர் ஆதாரங்கள், குடிநீர் மேல் நிலைதொட்டிகள், வீடுகளில் உள்ள கீழ்நிலை தொட்டிகள், குடிநீர் வழங்கும் லாரிகள் முதலியவற்றை ஆய்வு செய்து பொதுமக்களுக்கு பாதுகாப்பான குடிநீர் வழங்குவதை உறுதி செய்யும் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

தமிழக அரசை பொறுத்தவரை புயல் பாதிக்கப்பட்ட பகுதியில் தொற்று நோய் பாதிப்பு இல்லை என்பதை 100 சதவீதம் உறுதி செய்யவேண்டும் என்பதற்காக இந்த பணிகள் அனைத்தையும் தீவிரமாக மேற்கொள்ளப்படுகிறது.இவ்வாறு அமைச்சர் விஜயபாஸ்கர் கூறினார்.

மக்கள் நல்வாழ்வுத்துறை முதன்மை செயலாளர் ஜெ.ராதாகிருஷ்ணன் கூறும்போது, ‘புயலினால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள ஆஸ்பத்திரிகள், நடமாடும் மருத்துவ முகாம்களில் 53 ஆயிரம் பேர் காய்ச்சலுக்கான சிகிச்சை பெற்றுள்ளனர். இதில், காய்ச்சலுக்காக ஒரே பகுதியில் இருந்து அதிகம் பேர் சிகிச்சைக்காக வந்திருந்தால், அந்த பகுதிக்கு மருத்துவ குழுவினர் சென்று தொற்று நோய் தடுப்பு நடவடிக்கைகளை தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனர். இந்த சிகிச்சைகளுக்காக போதிய மருந்துகள், மருத்துவ உபகரணங்கள் அனைத்தும் போதுமான அளவு இருப்பு உள்ளது’ என்று கூறினார்.