ரிசர்வ் வங்கி நடவடிக்கையால் விவசாய தொழில் பாதிப்பு: திருநாவுக்கரசர்

281 0

201612170851373320_thirunavukkarasar-told-agricultural-impact-reserve-bank_secvpfரிசர்வ் வங்கி நடவடிக்கையால் விவசாயத்திற்கு தேவையான இடுபொருள்களை வாங்க முடியாத நிலை ஏற்பட்டு, விவசாய தொழிலே கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக திருநாவுக்கரசர் கூறி உள்ளார்.

தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி தலைவர் திருநாவுக்கரசர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

கிராமப்புற பொருளாதாரத்தை நோக்கமாகக் கொண்டு கூட்டுறவு வங்கிகள் கடந்த நூறு ஆண்டுகளுக்கு மேலாக செயல்பட்டு வருகின்றன. இந்தியா முழுமைக்கும் 369 மாவட்டங்களில் 13,943 மத்திய கூட்டுறவு வங்கிகள் செயல்படுகின்றன. இந்த நிலையில், செல்லாத பணத்தை மாற்றி கொடுக்க மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிகளுக்கு அனுமதி மறுக்கப்பட்ட அதிர்ச்சி செய்தி சமீபத்தில் வெளிவந்துள்ளது. செல்லாத ரூபாய் நோட்டை பெறுவதற்கு தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளுக்கு வழங்கப்பட்டுள்ள உரிமையை, கூட்டுறவுத்துறை வங்கிகளுக்கு மறுப்பது ஏன்? இந்த பாரபட்ச நிலை? இந்திய ரிசர்வ் வங்கியின் அறிவிப்பால் விவசாயிகள் கூட்டுறவு வங்கிகளிலிருந்து பணத்தை எடுக்கவோ, வாங்கிய கடனை திரும்ப செலுத்தவோ, கடனை திரும்ப பெறவோ முடியாத அவலநிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

 இதனால் விவசாயத்திற்கு தேவையான இடுபொருள்களை வாங்க முடியாத நிலை ஏற்பட்டு, விவசாய தொழிலே கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. கூட்டுறவு வங்கிகளை முடக்குகிற வகையில் இந்திய ரிசர்வ் வங்கி எடுத்துள்ள நடவடிக்கையை உடனடியாக தடுத்து நிறுத்துவதற்கு தமிழக அரசு தீவிர முயற்சியை மேற்கொள்ள வேண்டும். இத்தகைய நடவடிக்கைகள் மூலமாக கிராமப்புற பொருளாதாரத்தில் கடன் வழங்குவதில் முதுகெலும்பாக இருந்து செயல்பட்டு வரும் கூட்டுறவு வங்கிகளை முடக்குகிற வகையில் இந்திய ரிசர்வ் வங்கியின் அறிவிப்பை உடனடியாக திரும்பப் பெற வேண்டும்.இவ்வாறு அறிக்கையில் அவர் கூறியுள்ளார்.