ஹெலிகாப்டர் வாங்கியதில் இந்திய அரசியல்வாதிகளுக்கு லஞ்சம் கொடுத்ததாக பின்மெக்கானிக்கா முன்னாள் தலைவர் கியுசெப்பி ஆர்சிக்கு விதிக்கப்பட்ட சிறை தண்டனையை இத்தாலி கோர்ட்டு ரத்து செய்துள்ளது.
கடந்த 2010-ம் ஆண்டு ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சி காலத்தில் இத்தாலி நாட்டின் அகஸ்டா வெஸ்ட்லேன்ட் ஹெலிகாப்டர்களை தயாரிக்கும் பின்மெக்கானிக்கா நிறுவனத்திடம் இருந்து முக்கிய பிரமுகர்களின் பயன்பாட்டுக்காக 12 அதிநவீன ஹெலிகாப்டர்களை வாங்குவதற்கு ரூ.3,600 கோடிக்கு ஒப்பந்தம் செய்யப்பட்டது.
இதில், ரூ.360 கோடி லஞ்சப் பணம் இந்தியர்களுக்கு இடைத்தரகர்கள் மூலம் கைமாறியதாக குற்றச்சாட்டு எழுந்தது. இந்த குற்றச்சாட்டையடுத்து அந்நிறுவனத்தின் தலைவர் கியுசெப்பி ஆர்சி பதவி விலகினார்.
இதுதொடர்பாக 2013-ல் விமானப்படை முன்னாள் தளபதி எஸ்.பி. தியாகியிடம் சி.பி.ஐ. விசாரணை நடத்தியது. பின்னர், தியாகி உள்ளிட்ட 13 பேர் மீது வழக்கு பதிவு செய்தது. இந்த நிலையில், அகஸ்டா வெஸ்ட்லேண்ட் நிறுவனத்துடனான ஒப்பந்தம் 2014-ம் ஆண்டு ஜனவரி மாதம் ரத்து செய்யப்பட்டது. இதற்கிடையே, இந்தியர்களுக்கு லஞ்சம் கொடுத்ததாக கூறப்பட்டது தொடர்பாக அகஸ்டா வெஸ்ட்லேண்ட் நிறுவனத்தின் மீது இத்தாலியில் உள்ள மிலன் நகர கோர்ட்டில் விசாரணை நடந்து வந்தது.
இந்த வழக்கில் அந்த நிறுவனத்தின் முன்னாள் தலைவர் கியுசெப்பி ஆர்சி-க்கு கடந்த ஏப்ரல் மாதம் நான்கரை ஆண்டு சிறைத்தண்டனையும், அபராதமும் விதித்து தீர்ப்பளிக்கப்பட்டது. அந்நிறுவனத்திடம் இந்தியர்கள் லஞ்சம் பெற்றதையும் மிலன் கோர்ட்டு உறுதி செய்தது.
ஹெலிகாப்டர் ஊழலில் லஞ்சம் கொடுத்தவர்கள் ‘குற்றவாளிகள்’ என்று இத்தாலி கோர்ட்டு தீர்ப்பு அளித்தது. இந்த விவகாரத்தில் ஊழல் நடந்துள்ளது என்பதை நம்ப இடமுள்ளது என்றும், ரூ.65 கோடி முதல் ரூ.95 கோடி வரை இந்திய நிர்வாகிகளுக்கு லஞ்சம் கொடுக்கப்பட்டிருப்பது நிரூபணம் ஆகியிருப்பதாகவும் தீர்ப்பு வெளியானது.இந்த வழக்கில், இந்திய விமானப்படை முன்னாள் தளபதி தியாகி சமீபத்தில் கைதானார்.
இதற்கிடையில், தனக்கு விதிக்கப்பட்ட தண்டனையை எதிர்த்து உச்சநீதி மன்றத்தில் கியுசெப்பி ஆர்சி மேல்முறையீடு செய்திருந்தார். இதுதொடர்பான விசாரணையின்போது அவருக்கு விதிக்கப்பட்ட தண்டனை மிக அதிகபட்சமானது என்று அரசு தரப்பு வழக்கறிஞரும் ஏற்று கொண்டார்.இதையடுத்து, மிலன் கோர்ட்டு விதித்திருந்த சிறை தண்டனையை ரத்து செய்து இத்தாலி உச்சநீதி மன்றம் உத்தரவிட்டுள்ளது.

