2 குடும்பத்தினரும் ஒவ்வொரு தேர்தலிலும் யாராவது ஒருவருக்கு மொத்தமாக ஓட்டு போட்டு வருவது தான் வழக்கமாக கொண்டுள்ளனர்.
பட்டாசுக்கு பெயர் பெற்ற சிவகாசி அருகே பூசாரிபட்டி என்ற அழகிய கிராமம் உள்ளது. முற்றிலும் விவசாயத்தை நம்பியுள்ள இந்த கிராமத்தில் அதிக எண்ணிக்கை உடைய 2 பெரிய குடும்பத்தினர் கூட்டாக வாழ்ந்து வருவது இந்த நவீன காலத்தில் தொடருகிறது.
இதில் பூசாரி நாயக்கர் என்ற குடும்பத்தில் 90 பேர் உள்ளனர். இவர்களில் 61 பேர் வாக்காளர்கள் ஆவார்கள். பெருமாள்சாமி என்பவரது குடும்பத்தில் 190 பேர் உள்ளனர். இவர்களில் 80 பேர் ஓட்டு போட தகுதியானவர்கள்.
இந்த 2 குடும்பத்தினரும் ஒவ்வொரு தேர்தலிலும் யாராவது ஒருவருக்கு மொத்தமாக ஓட்டு போட்டு வருவது தான் வழக்கமாக கொண்டுள்ளனர்.
தேர்தல் நாளன்று என்ன வேலையாக இருந்தாலும் அதை எல்லாம் ஒதுக்கி வைத்து விட்டு ஒன்றாக சென்று ஓட்டு போடுவதை அன்று முதல் இன்று வரை கடைபிடித்து வருகின்றனர்.
இது குறித்து பூசாரி நாயக்கர் குடும்பத்தின் தலைவர் வெடிமுத்து கூறியதாவது:-
நாங்கள் ஆண்டாண்டு காலமாக ஒற்றுமையாக ஒரே குடும்பமாக வசித்து வருகிறோம். இது எங்களுக்கு மகிழ்ச்சியாக உள்ளது.
ஒவ்வொரு தேர்தலிலும் நாங்கள் ஒன்றாக கூடி கலந்து பேசி நமக்கு யார் நல்லது செய்வார்கள்? என பார்த்து ஓட்டு போடுவோம். இதற்காக நாங்கள் எந்த கட்சியிடம் இருந்தும் காசு, பணம் எதுவும் வாங்குவது கிடையாது.
யார் எங்கள் வீட்டுக்கு ஓட்டு கேட்டு வந்தாலும் அவர்களை மரியாதையுடன் வரவேற்போம். கட்சி பாகுபாடு எதுவும் பார்ப்பது கிடையாது.
எங்கள் குடும்பத்தில் வருகிற தேர்தலில் 17 பேர் புதிதாக வாக்களிக்க உள்ளனர். அவர்களும் இந்த தேர்தலில் ஓட்டு போட உற்சாகமாக உள்ளனர். அவர்களும் நாங்கள் சொல்கிறபடி தான் போட்டு போடுவதாக கூறி இருப்பது பெருமையாக உள்ளது. எப்போதுமே எங்கள் ஓட்டு விற்பனைக்கு கிடையாது.
இவ்வாறு அவர் கூறினார்.
வெடிமுத்துவின் மருமகள் மகாலட்சுமி கூறுகையில், பணத்துக்காக் எந்த கட்சிக்கும் ஓட்டு போடமாட்டோம். எங்க வீட்டு பெரியவர் மாமா தான். அவர் தான் குடும்பத்துக்கு எல்லாம். அவர் சொல்கிறதை தான் நாங்க எல்லாரும் கேட்போம்.
பணம் கொடுக்கிறார்கள் என்பதற்காக எந்த கட்சிக்கும் ஓட்டு போட சொல்ல மாட்டார். நம்முடைய விவசாயத்திற்கு யாரெல்லாம் ஒத்துழைப்பு கொடுக்கிறார்களோ அவர்களுக்கு தான் ஓட்டு போட சொல்வார்.
இந்த தேர்தலிலும் மக்களின் பிரச்சினைகளை தீர்க்கவும், விவசாயத்திற்கும் முன்னுரிமை கொடுப்பவர்களுக்கே எங்கள் ஓட்டு என்றார்.
இதே குடும்பத்தைச் சேர்ந்த முத்துப்பாண்டி என்பவர் கூறும்போது, “நாங்கள் கூட்டு குடும்பமாக ஒற்றுமையாக இருப்பது பெருமையாக உள்ளது. அனைத்து வேட்பாளர்களும் எங்கள் வீடுகளை தேடி வரும்போது அதுவே எங்களுக்கு ஒரு கெத்தாக உள்ளது என்று கூறினார்.
இதேபோல் பெருமாள் சாமி குடும்பத்தினரும் தேர்தல் சமயத்தில் ஒன்றாக கலந்து பேசி பெரியவர்கள் என்ன சொல்கிறார்களோ அந்த சொல்லுக்கு மதிப்பு கொடுத்து ஓட்டு போட்டு வருகின்றனர்.
ஒரே கிராமத்தில் 2 குடும்பத்திலும் மொத்தம் 141 ஓட்டுகள் உள்ளதால் ஒவ்வொரு தேர்தலின் போதும் இந்த 2 குடும்பத்தினர் ஓட்டுகளை குறிவைத்து அனைத்து வேட்பாளர்களும் இவர்களது வீடு தேடி செல்வது இன்றளவும் தொடர்கிறது.
வருகிற தேர்தலிலும் இவர்களின் ஓட்டுகளை மொத்தமாக அறுவடை செய்ய அனைத்து அரசியல் கட்சி வேட்பாளர்கள் முதல் சுயேட்சை வேட்பாளர்கள் வரை அவர்களை தேடி செல்ல ஆரம்பித்து விட்டனர்.
2 குடும்பத்தினர் ஓட்டுகளை எப்படியும் பெற வேண்டும்? என்பதற்காக அரசியல் கட்சியினர் அவர்கள் வெளியில் எங்கே சென்றாலும் மரியாதையுடன் கைகூப்பி ஓட்டு கேட்டு வருவது வித்தியாசமாக உள்ளது.

