யாழில் போராட்டத்தில் ஈடுபடும் மக்களை சந்திக்காமல் சென்ற இந்திய உயர்ஸ்தானிகர்- மக்கள் கவலை!

350 0

யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்டிருந்த இந்திய உயர்ஸ்தானிகர், நீதி வேண்டி தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுவரும் தங்களைச் சந்திக்காமல் சென்றுள்ளமை குறித்து போராட்டத்தில் ஈடுபடுவோர் கவலை வெளியிட்டுள்ளனர்.

இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் பாரப்படுத்த வேண்டுமென வலியுறுத்தி யாழில் இடம்பெற்றுவரும் சுழற்சி முறையிலான உணவுத் தவிர்ப்புப் போராட்டம் 13ஆவது நாளாக இன்றும் தொடர்கின்றது.

நீதி வேண்டிய இந்தப் போராட்டம் நல்லூர் – நல்லை ஆதீனம் முன்பாக யாழ்ப்பாணம் மற்றும் கிழக்குப் பல்கலைக்கழக மாணவர்களால் ஆரம்பிக்கப்பட்டு தொடர்ந்து இடம்பெற்று வருகின்றது.

இந்நிலையில், யாழ்ப்பாணத்துக்கு திடீர் விஜயம் மேற்கொண்டிருந்த இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே, மரியாதை நிமித்தமாக நல்லை ஆதீன குருமுதல்வரைச் சந்தித்திருந்தார்.

குறித்த சந்திப்பினை முடித்துத் திரும்பும் வழியில், உணவுத் தவிர்ப்புப் போராட்டத்தில் ஈடுபடுவோரால் கோசங்கள் எழுப்பப்பட்ட போதிலும் போராட்டத்தில் ஈடுபடுவோரை இந்திய உயர்ஸ்தானிகர் சந்திக்காமலேயே சென்றிருந்தார். இந்நிலையிலேயே, போராட்டத்தில் ஈடுபடுவோர் கவலையை வெளியிட்டுள்ளனர்.

இதேவேளை, இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் பாரப்படுத்துவதன் ஊடாக, இலங்கை அரசாங்கத்தினால் புரியப்பட்டுள்ள போர்க் குற்றங்கள், மனித நேயத்திற்கு எதிரான குற்றங்கள் மற்றும் தமிழ் இனத்திற்கு எதிராக இனவழிப்பு என்பவற்றிக்கு சர்வதேச நீதி வேண்டும் என இந்தத் தொடர் போராட்டத்தில் வலியுறுத்தப்பட்டு வருகின்றது.

அத்துடன், தமிழ் இனத்தின் மீதானா இனவழிப்புத் தொடராது இருப்பதற்கு தமிழ் மக்களின் நியாயமான கோரிக்கைகளான மரபுவழித் தாயகம், சுயநிர்ணய உரிமை, தமிழ் தேசியம் என்பன அங்கிகரிக்கப்பட வேண்டும் என கோரப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.