ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் அஷோக்க அபேசிங்க குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முன்னிலையாகியுள்ளார்.
ஈஸ்டர் தாக்குதல் தொடர்பில் அவர் வெளியிட்ட சர்சைக்குரிய கருத்து தொடர்பாக வாக்குமூலம் வழங்குவதற்காக குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் இன்று (வியாழக்கிழமை) முன்னிலையாகுமாறு அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையிலேயே அவர் இன்று காலை 9 மணியளவில் குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முன்னிலையாகியுள்ளார்.
அண்மையில் குருணாகல் பகுதியில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பொன்றின்போது உரையாற்றிய நாடாளுமன்ற உறுப்பினர் அசோக்க அபேசிங்க ஈஸ்டர் தாக்குதலுடன் தற்போதைய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் பசில் ராஜபக்ஷவுக்கு தொடர்புள்ளதாக தெரிவித்திருந்தார்.
இதனையடுத்து, குறித்த கருத்து தொடர்பில் விசாரணை மேற்கொள்ளுமாறு கோரி, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் உதயன கிரிந்திகொட, பிரமித்த பண்டார தென்னகோன், சஞ்ஜீவ எதிமான்ன, மதுர விதானகே, ஜகத் குமார சுமித்ர ஆரச்சி, மிலான் ஜயதிலக ஆகியோர் குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை முறைப்பாடு செய்திருந்தனர்.
அதன்பின்னர் இந்த கருத்து குறித்து வாக்குமூலம் வழங்குவதற்காக இரண்டு தடவைகள் அசோக்க அபேசிங்கவை குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முன்னிலையாகுமாறு அறிவித்தல் விடுக்கப்பட்டிருந்த போதிலும் அவர் முன்னிலையாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

