ஈஸ்டர் தாக்குதல்: பணம் கொடுத்த விவகாரம் குறித்து பிரதமர மஹிந்தவிடம் விசாரணை இடம்பெறவில்லை – ஜே.வி.பி. குற்றச்சாட்டு

358 0

தேர்தலில் வாக்குகளைப் பெறுவதற்கான ஒரு கருவியாக ராஜபக்ஷவினர் ஈஸ்டர் தாக்குதல்களை பயன்படுத்தியதாக மக்கள் விடுதலை முன்னணியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பிமல் ரத்நாயக்க குற்றம் சாட்டியுள்ளார்.

முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவினால் நியமிக்கப்பட்ட ஜனாதிபதி ஆணைக்குழு தொடர்பாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ புதிதாக எதுவும் செய்யவில்லை என்றும், 60,000 பக்க அறிக்கையின் 20,000 பக்கங்கள் மட்டுமே வெளியிடப்பட்டுள்ளதாவும் குறிப்பிட்டுள்ளார்.

முக்கிய குற்றவாளிகளை அறிக்கை வெளிகொண்டுவரவில்லை என்றும் சஹரான் தான் முக்கிய தற்கொலை குண்டுதாரி என குறித்த அறிக்கை தெரிவிப்பதாக கூறிய பிமல் ரத்நாயக்க, இந்த விடயம் அனைவருக்கும் தெரிந்த ஒன்று என கூறினார்.

உளவுத்துறை தீவிரவாத அமைப்புகளுக்கு பணம் கொடுத்தது என்ற உண்மையை பல ஆண்டுகளுக்கு முன்பு, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஏற்றுக்கொண்டார் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

இருப்பினும் இந்த உண்மை தொடர்பாக குறித்த ஆணைக்குழு தற்போதைய பிரதமரிடமோ அல்லது தற்போதைய ஜனாதிபதியிடமோ எந்த அறிக்கைகளையும் பதிவு செய்யவில்லை என்றும் பிமல் ரத்நாயக்க குற்றம் சாட்டினார்.