யாழ். மாநகர சபையைக் கலைக்க சதி நடக்கிறது : முதல்வர் வி.மணிவண்ணன்

235 0

ராஜபக்ஷவினரின் பின்னணியில் யாழ். மாநகர சபையைக் கலைக்க சதி நடக்கிறது. இந்தச் சதி வேலையில் தமிழ் தேசிய மக்கள் முன்னணி ஈடுபட்டுள்ளது என்று குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார் யாழ் மாநகர சபை முதல்வர் வி. மணிவண்ணன்.

மாநகர சபையின் செயற்பாடுகள் தொடர்பில் விளக்க மளிக்கும் செய்தியாளர் சந்திப்பு நேற்று இடம்பெற்றது. இதிலேயே மேற்படி குற்றச்சாட்டை முன்வைத்த அவர் மேலும் தெரிவித்தவை வருமாறு:

“யாழ். மாநகர சபையைக் கலைக்கும் முயற்சி பெரும் செலவில் முன்னெடுக்கப்படுகின்றது. மாநகரசபை முதல்வரான எனதும் மற்றும் ஆதரவு உறுப்பினர்களினதும் பதவிகளைப் பறிப்பதன் மூலமே இந்தத் திட்டம் முன்னகர்த்தப்படுகின்றது.

மாநகர சபை முதல்வர் பதவியை நான் இழக்கும் சந்தரப்பத்தில் மாநகரசபை கலையும். இது ராஜபக்ஷ தரப்பு விரும்பிய அல்லது அவர்களது நிகழ்ச்சி நிரல்.அவர்கள் விரும்பும் செயலும் இதுவே.

யாழ்ப்பாண பண்பாட்டு மையத்தை பொறுப்பெடுக்கும் அவர்களின் முயற்சிக்கு நாங்கள் தடையாக இருக்கிறோம். இதனால், ராஜபக்ஷ தரப்பு பெருமளவு பணத்தைச் செலவழித்து எங்களைப் பதவியிலிருந்து அகற்றும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றது.

குறிப்பாக என்னை மாநகரசபை உறுப்பினர் பதவியில் இருந்து விலக்குவதற்காக வழக்குகளிலே ஈடுபட்டு வருகிறது.

இந்தச் செயற்பாடுகளுக்கு எதிராக நாங்கள் கடுமையாகப் போராடி வருகின்றோம். இந்தச் செயற்பாடுகளுக்காக கிட்டத்தட்ட ஐம்பது இலட்சம் ரூபாவுக்கும் மேல் வழக்குகளுக்காக இதுவரை செலவிட்டுள்ளார்கள் என்றார்.

இதன்போது, இந்தச் செயலை நேரடியாகவா – வேறு நபர்கள் மூலமா செய்கிறார்கள் என அவரிடம் ஊடகவியலாளர்கள் கேள்வி எழுப்பினர்.

இதற்குப் பதிலளித்த அவர், வழக்கை நடத்துவதற்கு சிலரை வைத்துள்ளார்கள். எங்களின் கட்சியிலுள்ள அவர்களுக்கு விசுவாசமாக இருக்கின்ற, அவர்களின் நிகழ்ச்சி நிரலை ஏற்றுக்கொண்டு துரதிர்ஷ்டவசமாக இனத்தை அழிப்பதற்கான அல்
லது இனத்தைப் பிளவுபடுத்தும் செயல்பாடுகளில் ஈடுபடும் சிலர் ஊடாகவே இந்தச் செயல் முன்னெடுக்கப்படுகின்றது. 2019இல் ராஜபக்ஷ தரப்பு வெல்ல வேண்டு மென்று துடித்தவர்கள் இதனைச் செய்கின்றார்கள்” என்றார்.