சம்பந்தரின் அறிக்கையை நிராகரித்தது ரெலோ!

234 0

பிரித்தானியா தலைமையிலான இணை அனுசரணை நாடுகளால் தற்போது வெளியிடப்பட்ட வரைபைப் பிரேரணையாக வெற்றிகரமாக நிறைவேற்றும்படி இணை அனுசரணை நாடுகளைக் கோருவது தமிழரின் முயற்சியை பலமிழக்கச் செய்யும் என ரெலோ தெரிவித்துள்ளது.

குறித்த பிரேரணையை நிறைவேற்றும்படி, தமிழ் தேசியக் கூட்டமைப்பு சார்பாக அதன் தலைவர் இரா.சம்பந்தன் ஊடகங்களுக்கு வெளியிட்ட அறிக்கை தொடர்பாக, ரெலொ வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபையில் அமைச்சர் தினேஷ் குணவர்தன ஆற்றிய உரைக்குப் பதிலளிக்கும் முகமாக இரா.சம்பந்தன் ஊடகங்களுக்கு வழங்கிய அறிக்கை தொடர்பாக தமது நிலைப்பாட்டை தமிழ் மக்களுக்குத் தெளிவுபடுத்துவதாக ரெலோ தெரிவித்துள்ளது.

அத்துடன், குறித்த அறிக்கையில் கூட்டமைப்பாக ரொலோ தலைவரின் பெயரும் இணைக்கப்பட்டருந்த போதும், தமது பரிசீலனைக்கு இந்த அறிக்கை சமர்ப்பிக்கப்படாதமை வருத்தத்துக்குரியது எனவும் டொலோவின் ஊடகப் பேச்சாளர் கு.சுரேந்திரன் இன்று (ஞாயிற்றுக்கிழமை) வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த அறிக்கையில், “ஜெனிவா கூட்டத்தொடரில் மனித உரிமைச் சபையின் அமர்வில் தமிழ் மக்களுக்காக நீதிகோரிக் கொண்டுவரப்படவுள்ள பிரேரணையில் உள்ளடக்கப்பட வேண்டிய விடயங்கள் அடங்கிய கோரிக்கையை மூன்று தமிழ் தேசியக் கட்சிகளின் கூட்டுத் தலைமைகள், சமூக அமைப்புக்கள் மற்றும் மதத் தலைவர்கள் ஒன்றிணைந்து கையொப்பமிட்டு அங்கத்துவ நாடுகளுக்கு அனுப்பி வைத்திருந்தோம்.

இருப்பினும், மாதிரி வரைபிலே நாம் கோரிக்கை விடுத்த முக்கியமான விடயங்கள் உள்வாங்கப்படாமலும், முன்னைய பிரேரணைகளிலிருந்த உறுதியான பல சரத்துக்கள் தவிர்க்கப்பட்டமையையும் அவதானித்து இருந்தோம்.

இந்நிலையில், சமர்ப்பிக்கப்படவுள்ளம் பிரேரணை பலமான உறுதியான சரத்துக்களை உள்ளடக்கியதாக அமையும்போதே எமது இனத்திற்கான நீதியைப் பெற்றுக்கொள்ள முடியும் என்ற வகையில் அதைப் பலப்படுத்தும் வகையாக, தமிழ் தேசிய அரசியல் பரப்பில் இருப்பவர்களும் சர்வதேச உறவுகள் மற்றும் சமூகமும் இணை அனுசரணை நாடுகளும் முயற்சி செய்து கொண்டிருக்கிறோம்.

எனவே, பிரேரணையின் இறுதி வடிவம் என்னவென்று தெரியாமல் இருக்கின்ற இக்கட்டான சூழ்நிலையில், தற்போது வெளியான வரைபைப் பிரேரணையாக வெற்றிகரமாக நிறைவேற்றும்படி இணை அனுசரணை நாடுகளைக் கோருவது எமது முயற்சியை பலமிழக்கச் செய்வதோடு குழப்பகரமான சூழ்நிலையை ஏற்படுத்துகின்றது. அதுமாத்திரமல்லாமல், எமது மக்களின் நீதிக்கான போராட்டத்தினையும் பாதிக்கப்பட்ட மக்களுக்கான நீதி கிடைப்பதையும் பலவீனமடையச் செய்யும். ஆகவே இந்த அறிக்கைக்கு நாம் ஒருபோதும் இணங்க மாட்டோம்.

மனித உரிமைச் சபையில் அங்கத்துவ நாடுகளிடம், எமது மக்களுக்கு நீதி கிடைக்கும் வகையான பலமான சரத்துக்களை உள்ளடக்கிய பிரேரணையை நிறைவேற்றுமாறு கோரிக்கை வைப்பதுதான் எமக்கு இழைக்கப்பட்ட அநீதிகளுக்கு நீதிகோரி நிற்கும் எமது மக்களுக்கு நாம் செய்யும் தலையாய கடமையாக இருக்கும்.

தவிர, அரச பிரதிநிதிகள், அமைச்சருடைய கருத்துக்களுக்குப் பதிலளிப்பதில் நேரம் கடத்துவது சரியான ஒன்றாக இந்த நேரத்தில் அமையாது. எமது ஒன்றிணைந்த கோரிக்கைகளயும், ஐ.நா. மனித உரிமை உயர்ஸ்தானிகரது அறிக்கையிடப்பட்ட விடயங்களையும் உள்ளடக்கியதாக மனித உரிமைச் சபையில் எமது மக்களுக்கான நீதியை உறுதிப்படுத்துவதாகவே சமர்ப்பிக்கப்படுகின்ற பிரேரணை அமைய வேண்டும். அத்துடன் அதனை வெற்றிபெற வைக்க வேண்டுமெனவும் அங்கத்துவ நாடுகளை நாம் கோருகிறாம். இதுவே எமது நிலைப்பாடு.

எமது மக்களின் நீதிக்கான உரிமைக்கான போராட்டத்தில் எமது கட்சி தொடர்ந்தும் உறுதியுடன் பயணிக்கும்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.