தமிழக காவல்துறையில் உள்ள காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும்

412 0

201612160912513661_vijayakanth-request-fill-vacant-posts-tn-police-force_secvpfதமிழக காவல்துறையில் உள்ள காலி பணியிடங்களை உடனே நிரப்பி, கூடுதலாக காவலர் பணியிடங்களையும் உருவாக்க வேண்டும் என்று விஜயகாந்த் கோரிக்கை விடுத்துள்ளார்.

தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

தினசரி செய்தித்தாள்களில் தமிழ்நாட்டில் கொலை, கொள்ளை செய்திகள் வராத நாளே இல்லை. மக்களின் உயிர் உடமைகளை பாதுகாக்கும் பொறுப்பில் உள்ள காவல்துறையில் காலி பணியிடங்களை உடனுக்குடன் நிரப்ப வேண்டும். நிர்வாக வரைமுறைப்படி ஒரு காவலர் 505 மக்களுக்கு பாதுகாப்பு பொறுப்பு மேற்கொள்ள வேண்டும்.

காவலர் பணியிடங்கள் காலியாக உள்ளதால், தற்போது ஒரு காவலர் 609 பேருக்கு பாதுகாப்பு அளிக்கும் நிலை உள்ளது. போதிய எண்ணிக்கையில் காவலர்கள், அதிகாரிகள் இல்லாததால் துரித நடவடிக்கை எடுக்காமல் காலதாமதம் ஆகிறது.

தமிழக மக்கள் தொகை 7 கோடியே 21 லட்சத்து 47 ஆயிரத்து 30 ஆகும். தமிழக காவல்துறை காவலர்களின் எண்ணிக்கை ஒரு லட்சத்து 35 ஆயிரத்து 830 ஆகும். ஆனால், பணியில் உள்ள காவலர்களின் எண்ணிக்கை 98 ஆயிரத்து 500 மட்டும். காலி பணியிடங்கள் 37 ஆயிரத்து 330.

மக்கள் தொகை ஆண்டுதோறும் அதிகரித்து கொண்டே போவதால், குற்றங்களும் அதிகரித்து கொண்டே போகிறது. கூலிப்படையினரின் செயல்பாடுகளால் பொதுமக்கள் மத்தியில் அச்சம் நிலவுகிறது. எனவே தமிழக காவல்துறையில் உள்ள காலி பணியிடங்களை உடனே நிரப்பி, கூடுதலாக காவலர் பணியிடங்களையும் உருவாக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.